உத்திரப்பிரதேச மாநிலத்தித்தின் பல்வேறு இடங்களில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை என்று வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள  சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம்  ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு சோனியா காந்தியை காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 

சோனியா காந்தியை நீண்டகாலமாக காணவில்லை. இதனால் ரேபரேலியில் பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவரின் இந்த நடவடிக்கை ரேபரேலி மக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது என்றும், அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த வால் போஸ்டர்களை  கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், அவற்றை கிழித்து எடுத்தனர். அத்துடன் இது பாஜகவின் சதிச் செயல் என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பின்னர் கடந்த 5 மாதங்களாக சோனியா காந்தி தனது தொகுதிக்கு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறகனவே சில நாட்களுக்கு முன்னர் அமேதி தொகுதியில் அந்த தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.