கர்நாடக அமைச்சரவை இலாகாக்கள் வெளியீடு: சித்தராமையாவுக்கு நிதி; சிவகுமாருக்கு 2 இலாகா!
32 பேர் கொண்ட அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான பரமேஸ்வராவுக்குக் கிடைத்துள்ளது. 2 இஸ்லாமியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மே 20ஆம் தேதி சித்தராமையா முதல்வராகவும் டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவின்போது, பரமேஷ்வரா, கே.ஹெச்.முனியப்பா, எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக விவாதிக்க சித்தராமையாவும் டி.கே. சிவகுமாரும் அண்மையிரல் டெல்லி சென்று திரும்பினர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்படி கர்நடாக அமைச்சரவை இலாகா பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், முதல்வர் சித்தராமையா நிதி, தகவல் தொழில்நுட்பத் துறைகளை தன்வசம் வைத்துக்கொண்டிருக்கிறார். துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு நீர்வளத்துறை, பெங்களூரு நகர மேம்பாட்டுத்துறை ஆகிய இரு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரியங்க் கார்கேவுக்குக் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் பதவி தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான பரமேஸ்வராவுக்குக் கிடைத்துள்ளது.
ஜேடிஎஸ் உடனான கூட்டணி ஆட்சியில் குமாரசாமியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த எம்.பி. பாட்டீலுக்கு நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
UPI பரிவர்த்தனையில் 95,000 மோசடிகள்! பணத்தை இழக்காமல் தப்பிக்க 10 ஆலோசனைகள்
32 பேர் கொண்ட அமைச்சரவையில் லிங்காயத் சமூகத்தினர் 8 பேர் உள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த 6 பேரும், ஒக்கலிகா சமூகத்தினர் 4 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இரண்டு முஸ்லிம் எம்எல்ஏகளுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி, வக்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக சமீர் அகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். ரஹிம் கான் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒரே பெண் அமைச்சர் பெல்காம் தொகுதியைச் சேர்ந்த லக்ஷ்மி ஆர். ஹெப்பால்கர் மட்டுமே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை ஆகியவை இலாகாக்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏடிஆர் அறிக்கையின் படி கர்நாடாகவின் அமைச்சரவையில் 31 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.