Delhi Girl Murder: டெல்லியில் சிறுமியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்! வெறித்தனமான தாக்குதலை வேடிக்கை பார்த்த மக்கள்!
டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு தெருவில் சிறுமியை கத்தியால் குத்தியும், காலால் உதைத்தும், கல்லைத் தூக்கிப் போட்டும் தாக்கி கொடூரமாகக் கொன்ற நபரை யாரும் தடுக்க முன்வரவில்லை.
டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகம் காணப்படும் தெருவில் இளம்பெண்ணை ஒரு இளைஞர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லும்போது, அப்பகுதியில் இருந்தவர்கள் தாக்குதலை நிறுத்த எந்த முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்த்து நின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
நேற்று வடக்கு டெல்லியின் ரோகினியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாக சென்ற 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் வழிமறித்து நிறுத்தி, வெறித்தனமாகத் தாக்குகிறார். அந்தப் பகுதியில் இருந்த யாரும் சிறுமியை காப்பாற்ற முன்வராமல் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள்.
அந்த இளைஞர் கொல்லப்பட்ட சிறுமியைக் காதலித்து வந்தார் என்றும் நேற்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் ஆத்தம் அடைந்து இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
சிறுமி தனது நண்பரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவுக்குச் செல்லும்போது, தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். "அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த இளம்பெண் தனது நண்பர் மகனின் பிறந்தநாளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் அவரைப் பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்தி கல்லால் தாக்கினார்" என்று மூத்த அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
அக்கம் பக்கத்தினர் மூலம் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறையினர் கூறுகிறார்கள். "ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்" என டில்லி துணை போலீஸ் கமிஷனர் சுமன் நல்வா கூறினார்.