தெலுங்கானாவில் ஏழைகளுக்கான ரேஷனையும் குடும்ப அரசியல் கட்சிகள் கொள்ளையடித்தன:பிரதமர் மோடி!!
பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இன்று ஐதராபாத் வந்தார். முதல் நிகழ்வாக செகந்திராபாத் முதல் திருப்தி வரையிலான வந்தே பாரத் ரயிலை சேவையை துவக்கி வைத்தார்.
முன்னதாக ஐதராபாத் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஐடி சிட்டி, ஐதராபாத் ஆகிய நகரங்களை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுடன் இணைக்கிறது. இது மூன்று மாதங்களுக்குள் தெலுங்கானாவிலிருந்து தொடங்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயிலாகும்.
இந்த ரயில் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் குறைக்கும் மற்றும் குறிப்பாக யாத்ரீகர் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் சேவை மூலம் இரண்டு மாநிலங்களும் இணைக்கப்படுகிறது என்று மோடி தெரிவித்தார். பின்னர் ரயிலில் பயணித்த மாணவர்களுடன் மோடி உரையாடினார்.
இதையடுத்து, செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். செகந்திராபாத் ரயில் நிலையம் ரூ.720 கோடி செலவில் மறுவடிவமைக்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது.
Video: சுகோய் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தெலுங்கானா மாநிலத்தில் ரூ. 11,300 கோடி செலவில் பல்வேறு திட்டங்களுக்கும், இதைத்தொடர்ந்து ரூ. 7,850 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ''தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கான உங்களது கனவை செயல்பட வைப்பத்துதான் மத்திய அரசின் நோக்கம். இன்று நான் செகந்திராபாத் - திருப்பதி இடையிலான ரயிலை துவக்கி வைத்து இருக்கிறேன். இதன்மூலம் சத்யம், நவீனம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்துள்ளேன். புதிய இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நவீன கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.
தெலுங்கானா வரைக்கும் நெடுஞ்சாலை இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணைப்பு தூரம் இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது 5,000 கி.மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்களது அரசு ஏழு மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்கிறது. அவற்றில் ஒன்று தெலுங்கானாவிலும் அமைகிறது. இதன் மூலம் மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
இன்றைய ரயில்வே சேவை மூலம் பயணம், வாழ்வாதாரம், தொழில் ஆகியவை எளித்தாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் தாமதம் ஆகின்றன. இதற்குக் காரணம் அந்தந்த மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் மாநில அரசுகள் தடைகளை ஏற்படுத்தக் கூடாது. நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். ஆனால், சிலர் கோபம் அடைகின்றனர்.
ஒவ்வொரு திட்டத்திலும் தங்கள் குடும்பம் இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். இந்த விஷயத்தில் தெலுங்கானா மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஊழலும், குடும்பமும் வேறு வேறு அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு தெலுங்கானாவின் விரைவான முன்னேற்றம் முக்கியமானது.. தெலுங்கானாவில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷனைக் கூட 'பரிவர்வாத்' கொள்ளையடித்தது'' என்றார்.