முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக தனது பணியை தொடங்கி தனது சிறப்பான செயல்பாடுகளால் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர். அவரைப் பெருமை படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர், ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்தில், "சிறந்த வழிகாட்டி, தனித்துவம் மிக்க ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துச் செய்தியில், "மாணவர்களை நல்வழிபடுத்தி ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதையை செலுத்துவதுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் பன்வரிலால் புரோகித், மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி, டாக்டர் ராதாகிருஷ்ணன் வழியில் ஆசியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும் சமுதாய உணர்வுகளையும் கற்பித்து சிறந்த முறையில் பணியாற்றிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், தாய் தந்தைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் வைத்து உலகம்  போற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவதாக கூறியிருக்கிறார்.

இன்னும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.