இந்தியாவில் கொரோனாவை தடுக்க, மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவை தடுத்துவிரட்ட, ஊரடங்கு அவசியம் என்பதால், கட்டாயத்தின் பேரில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகளின் மூலமாக இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன. ஊரடங்கால் வருவாயை இழந்து கஷ்டத்தில் இருக்கும் ஏழை மக்களின் பசியாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. 

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் நார்த்(வடக்கு) 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பதுரியா நகரில் தஸ்பாரா என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், அனைவருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும். எனவே அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசெல்லுமாறு போலீஸார், போராட்டக்காரர்களிடம் வலுயுறுத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட்டு போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் வாக்குவாதம் முற்றி மோதலாக வெடித்தது. 

அதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பானது. போலீஸார் லத்தியை எடுத்து அடித்து போராட்டத்தை கலைக்க, போராட்டக்காரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இருதரப்பும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதில் 3 போலீஸாருக்கும் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் இந்த போராட்டமும், அதனால் வெடித்த மோதலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்தும் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்ற மக்களின் குற்றச்சாட்டு குறித்தும் விளக்கமளித்த அந்த துறையின் அமைச்சர் ஜோதிப்ரியோ முல்லிக், இந்த சம்பவம் குறித்து அறிந்ததுமே இதுகுறித்து விசாரித்தேன். மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் அந்த ஏரியாவின் லோக்கல் கவுன்சிலர் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த பொருட்களை வழங்கவில்லை என்பதால்தான் அந்த போராட்டம் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.