மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரைத் தாக்கியது. அந்த அதிகாரி நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூர் நகரில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி சிறுத்தையின் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தையின் திடீர் தாக்குதல்
கோல்ஹாப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மகாராஷ்டிரா மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் ஒரு சிறுத்தை நுழைந்து அலைந்து திரிந்துள்ளது.
சிறுத்தையைப் பிடிப்பதற்காகச் சென்ற காவல்துறைக் குழுவை நோக்கிச் சிறுத்தை திடீரெனத் தாக்கியது. இதனால் காவலர்கள் குறுகிய சந்துகளில் சிதறி ஓடினர். அப்போது காவலர் ஒருவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்தார். உடனடியாகப் பாய்ந்த சிறுத்தை அவர் மீது குதித்துத் தாக்க முயன்றது.
அந்த அதிகாரி விழிப்புடன் இருந்ததாலும், உடன் வந்த காவலர்கள் சத்தம் எழுப்பியதாலும், சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. இதனால் அந்த அதிகாரி பெரும் ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
வைரல் வீடியோ
சிறுத்தை விரட்ட, பல போலீசார் அலறி அடித்து ஓடும் காட்சி வீடியோவில், பதிவாகியுள்ளது. மீட்புப் பணியின் போது அதிகாரிகள் தடி மற்றும் கம்பிகளை ஏந்திச் சென்றதால், சிறுத்தை ஆக்ரோஷமடைந்து அவர்களைத் துரத்தியதாகக் கூறப்படுகிறது.
வனத்துறை அதிகாரிகளின் தகவல்படி, இந்த மீட்புப் பணியின்போது காவலர் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். எனினும், யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை.
தற்போது, அதிகாரிகள் அந்தப் பகுதிக்குப் பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். சிறுத்தைக்குப் மயக்க மருந்து கொடுத்துப் பிடிக்கும் பணி நடப்பதால், பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
