ஆந்திரா மாநிலம் சித்தூரில், உதவி கேட்டு காவல் நிலையத்தை அணுகிய 28 வயது பெண்ணை, போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூரில் உதவி கேட்டு காவல் நிலையத்தை அணுகிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்தூர் மாவட்டம் புங்கனூர் காவல் நிலைய கான்ஸ்டபிள் உமாசங்கர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் கிரண் குமார் ஆகியோர் மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 28 வயது பெண் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியே சொன்னால் மூன்று குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். ஊர்க்காவல் படை வீரர் தொலைபேசி அழைப்புகள் மூலம் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். புகார் அளிக்க பல காவல் நிலையங்களை அணுகியும், இரண்டு வாரங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நீதி கேட்டு பொதுவெளியில் முறையிட்ட பிறகே போலீசார் வழக்குப் பதிவு செய்ததாகவும் அந்த பெண் கூறினார்.
ஊடகங்கள் முன் வந்து வெளிச்சத்திற்கு வந்த பிறகே, போலீசார் விசாரணைக்குத் தயாரானதாகவும் அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், பங்காருபாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தேகல பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதவி கேட்ட பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
