பிரதமர் மோடி அடுத்த வாரம் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார். மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக சைப்ரஸ் மற்றும் குரோஷியாவிற்கும் அவர் பயணம் செய்வார். காலிஸ்தான் விவகாரத்திற்குப் பிறகு மோடி கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பலதரப்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பை இந்தியா ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளார். இதன் ஒரு பகுதியாக சைப்ரஸ் மற்றும் குரோஷியாவுக்கும் அவர் பயணம் செய்வார். இந்தப் பயணத்தில் பிரதமர் கனடாவுக்குச் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்த பிறகு, முதல் முறையாக இந்தியப் பிரதமர் கனடாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஜி7 மாநாட்டில் மோடி:

சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக, கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ஜூன் 16-17 தேதிகளில் கனடாவின் கனானாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இந்த உச்சி மாநாட்டில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் முன்வைப்பார் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

முந்தைய அறிக்கைகள் பிரதமர் மோடி கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று குறிப்பிட்டிருந்தன. அப்படி நடந்திருந்தால், ஆறு ஆண்டுகளில் அவர் பங்கேற்காத முதல் உச்சி மாநாடாக அது அமைந்திருக்கும்.

இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதலில் ஜூன் 15 முதல் 16 வரை சைப்ரஸுக்குச் செல்லும் மோடி, பின்னர் ஜூன் 16 மற்றும் 17 இல் கனடாவில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இறுதியாக ஜூன் 18ஆம் தேதி குரோஷியா சென்று, அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்புவார்.

இந்தியா - கனடா பேச்சுவார்த்தை:

பிரதமரின் பயணத்தை அறிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவும் கனடாவும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்று கூறியுள்ளது. ஜி7 உச்சி மாநாட்டின்போது இரு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையேயான சந்திப்பு, கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வழிகளை ஆராயவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை நம்பிக்கை தெரிவித்தது.

வாராந்திர ஊடக சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிரதமருக்கு கடந்த வாரம் கனடா பிரதமரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின்போது, ​​பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.