மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்தது. அதை கலைத்துவிட்டு மத்திய அரசு அதற்கு பதிலாக நிதி ஆயோக்கை உருவாக்கியது. பிரதமர் தலைமையில் இந்த குழு இயங்கி வருகிறது. முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆட்சி மன்ற குழுவின் முதல் கூட்டம், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி நடைபெற்றது. அதன்பிறகு ஆண்டுதோறும் அதன் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் கொரோனா தாக்கம் காரணமாக நடைபெறவில்லை.

நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுவின் 6வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதன் முறையாக ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசம் பங்கேற்கிறது. இன்றைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்கிறார். மேலும், கூட்டத்தில், வேளாண் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் திறன், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் மம்தா பானர்ஜி, நிதி ஆயோக்கின் முந்தைய கூட்டங்களையும் புறக்கணித்துள்ளார்.