மத்திய, மாநில அரசுகளின் பெருமுயற்சியால் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் கணிசமான அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கியும் வைத்தார். தமிழகம் வந்த பாரத பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களான அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக அசாம் மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் தேமாஜியில் உள்ள இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் சிலாபதாரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

அங்கிருந்து மேற்கு வங்கம் செல்லும் பிரதமர், ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25ம் தேதி அன்று அசாம் மாநிலத்தில் உள்ள படத்ரவா மடாலயம் மற்றும் சத்திரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.