வாரணாசியில் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஓபிஎஸ், தம்பிதுரை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர். 

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவாலை 3.71 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில் 2-வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இந்தமுறை வாரணாசியில் மட்டும் போட்டியிடுகிறார்.

 

 இந்நிலையில் இதற்காக நேற்று வாரணாசியில் திறந்த வாகனத்தில், தொண்டர்களுடன் பேரணியாக சென்ற பிரதமர் மோடி, கங்கை நதியில் நடந்த பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து இன்று காலை கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார். பின்னர் அப்பகுதியில் உள்ள காலபைரவர் கோயிலில் வழிபாடு நடத்திய மோடி, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

பின்னர் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகலிதளம் தலைவர் பிகாஷ்சிங், ஓபிஎஸ், தம்பிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் அதிமுக துணைமுதல்வர், அமைச்சர்கள் வாரணாசியில் முகாமிட்டுள்ளனர்.