கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடியின் இந்த உரையை அகில இந்திய வானொலியில் மட்டுமின்றி தூர்தர்ஷன், நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமாகவும் கேட்கலாம். கடந்த முறை கலாச்சாரம், சுற்றுலா, விவசாயம் ஆகியவை குறித்து பேசிய பிரதமர்,இன்றைய 74வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். இன்றைய நிகழ்ச்சியில் முதலில் மழை நீர் சேகரிப்பு குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். இயற்கை அளிக்கும் தண்ணீர் என்ற பரிசை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றும், நீரை பாதுகாக்கும் கூட்டு முயற்சி திருவண்ணாமலையில் நடக்கிறது. அந்த பகுதியில் மக்கள் தங்களுடைய மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். 

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு டாக்டர் சி.வி. ராமன் குறித்து  பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்திய விஞ்ஞானிகள் குறித்து இளைஞர்கள் படிப்பதோடு மட்டுமல்லாது, அறிவியல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தமிழ் குறித்த தன்னுடைய தீராத ஆசையையும் மக்களுடன் பகிர்ந்து கொண்டார். 

உலகிலேயே மிகவும் அழகான தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை கற்க என்னால் முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் தரம் மற்றும் அதில் எழுதப்பட்ட கவிதைகளின் ஆழம் குறித்து பலர் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள். தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது. தமிழ் கற்க வேண்டும் என நான் பலமுறை முயற்சி செய்தாலும் அதில் என்னால் வெற்றி பெற முடியவில்லை என தெரிவித்தார். விரைவில் தேர்வுகள் வர உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வுகள் குறித்து கவலைக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் தேர்வெழுத வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.