மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பான நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுவின்  6வது கூட்டம் காணொலி மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். 

வேளாண் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் திறன், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் முதன் முறையாக ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசம் பங்கேற்கிறது. தமிழகம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். 

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை, மாநிலங்களுக்கிடையே மட்டுமல்லாது மாவட்டங்களுக்கிடையேயும் கூட்டாச்சி முறையை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இந்தியாவின் சுய சார்பு இந்தியா திட்டம் உலகத்திற்கே உதவியாக இருக்கப்போகிறது என்றும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு நாம் பெரும் உதவி செய்ய வேண்டும் என்றும் மாநில முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். 

தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்து வருவதாக தெரிவித்தார். கோவிட் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டன என்பதை கண்டோம். இதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை உலகத்திற்கு முன்பாக காட்டியுள்ளது என்றும் கூறினார்.