முதல் தேசியப் படைப்பாளர்கள் விருது: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!
முதலாவது தேசியப் படைப்பாளர்கள் விருதுகளை பிரதமர் மோடி நாளை வழங்கவுள்ளார்
பிரதமர் மோடி நாளை காலை 10:30 மணியளவில் டெல்லி பாரத் மண்டபத்தில் முதல் தேசிய படைப்பாளர்கள் விருதை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது, அங்கு கூடியிருப்பவர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
தேசிய படைப்பாளிகள் விருது என்பது கதை சொல்லல், சமூக மாற்ற ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, கேமிங் உள்ளிட்ட களங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாகும். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த விருது கருதப்படுகிறது.
தேசிய படைப்பாளர் விருதுக்கான முதல் சுற்றில், 20 வெவ்வேறு பிரிவுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு சுற்றில், பல்வேறு விருது பிரிவுகளில் டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது: ராஜ்நாத் சிங்!
சிறந்த கதைசொல்லிக்கான விருது உட்பட இருபது பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படும்; ஆண்டின் பிரபல படைப்பாளி; பசுமை சாம்பியன் விருது; சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி; மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி; ஆண்டின் கலாச்சார தூதர்; சர்வதேச படைப்பாளி விருது; சிறந்த பயண படைப்பாளி விருது; தூய்மை தூதர் விருது; நியூ இந்தியா சாம்பியன் விருது; டெக் கிரியேட்டர் விருது; ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது; மிகவும் படைப்பாற்றல் கொண்ட படைப்பாளி (ஆண் & பெண்); உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளி; கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி; கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி; சிறந்த மைக்ரோ கிரியேட்டர்; சிறந்த நானோ படைப்பாளி; சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நாளை, மார்ச் 8 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, முதலாவது தேசிய படைப்பாளிகளுக்கான விருதை வழங்குகிறேன். இந்த விருதுகள் புதுமை, படைப்பாற்றல் மற்றும் படைப்பாளியின் சமூகத்தின் குறிப்பிடத்தக்க உணர்வின் கொண்டாட்டமாகும்.” என பதிவிட்டுள்ளார்.