இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது: ராஜ்நாத் சிங்!
இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
நாட்டின் தன்மைக்கேற்ப அரசு துணிச்சலுடன் செயல்படுவதால் இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியத்தன்மை உணர்வுடன் அதை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதால், இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட தற்போது வலுவாக உள்ளது என்று கூறினார்.
பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பு திட்டத்தை ஊக்குவிப்பது, அரசு கொண்டு வந்துள்ள மிகப்பெரிய மாற்றம் என்று ராஜ்நாத் சிங் விளக்கினார். இது இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு புதிய வடிவத்தை அளித்து வருகிறது என்று அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி தொழில்துறை வழித்தடங்களை அமைப்பது உட்பட தற்சார்பை அடைய பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
மக்களவைத் தேர்தல் 2024: காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள்!
2014ஆம் ஆண்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சுமார் ரூ.40,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.1.10 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஒன்பது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி மதிப்பு தற்போது ரூ.16,000 கோடியை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2028-29-ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.