தேர்தலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் மோடி; ஈவிஎம் இல்லாமல் பாஜக 180 இடங்களை தாண்டாது: ராகுல் காந்து தாக்கு!
தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து தலைநகர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள்சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஃபரூக் அப்துல்லா, திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்ட பலர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரின் மனைவிகளுக்கு அருகே சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “ஒரு சில கோடீஸ்வரர்களின் உதவியுடன் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருகிறார். ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது.” என கடுமையாக சாடினார்.
பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது என்ற ராகுல்காந்தி, காங்கிரஸின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
கச்சத்தீவு பிரச்சினையும்; கலைஞர் சொன்னதும் என்ன?
எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குகளுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல, அரசியல் சாசனம், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம் என்று ராகுல் காந்தி கூறினார். “நீங்கள் நியாயமாக வாக்குகளை அளிக்கவில்லை என்றால், மேட்ச் பிக்சர் வெற்றி பெறுவார்.” என ராகுல் காந்தி கூறினார்.
“எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை. தேர்தலுக்கு முன்பு இரண்டு முதல்வர்களை சிறைக்கு அனுப்பியுள்ளீர்கள், எங்கள் கணக்குகள் அனைத்தையும் முடக்கி வைத்துவிட்டார். தேர்தலுக்கு முன்பே இதை ஏன் செய்தீர்கள்? உங்களால் இதனை 6 மாதங்களுக்கு முன்போ அல்லது பின்போ செய்திருக்க முடியும் அல்லவா?” என ராகுல் காந்தி காட்டமாக கேள்வி எழுப்பினார்