உத்தரகாண்ட் சுரங்க விபத்து: பிரதமர் மோடி நேற்றிரவு ஆலோசனை!
உத்தரகாண்ட் சுரங்க விபத்து தொடர்பாக பிரதமர் மோடி நேற்றிரவு முக்கிய ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 41 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 10ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் சுரங்க விபத்து தொடர்பாக பிரதமர் மோடி நேற்றிரவு முக்கிய ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். பிரதமர் மோடியின் பரபரப்பான சுற்றுப் பயணத்திற்கிடையேயும் கூட, உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த பிரதமர் மோடி, உடனடியாக சுரங்க மீட்புப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார், இதில், துறைசார்ந்த மூத்த அதிகாரிகள். மேலும், ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து உத்தரகாண்ட் முதல்வர் விளக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுக்கு 10 சதவீத உயர்வுடன் மாதம் ரூ.70,000இல் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!
இதனிடையே, சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நவீன இயந்திரங்கள் கொண்டும், குழாய் மூலம் பாதுகாப்பு பாதை அல்லது சிறிய சுரங்கப்பாதை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்பு நடவடிக்கைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் உத்தராகண்ட் சுரங்கப் பாதையை நேரில் ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவரைப்போலவே சர்வதேச நிபுணர்கள் பலரும் நேரிலும், ஆன்லைன் மூலமும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.