மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கருக்கு பிரதமர் மோடி நாளை பயணம்!
தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார்

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அம்மாநிலங்களில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆளும் மத்திய பாஜக அரசை பொறுத்தவரை தேர்தல் நடைபெறவுள்ள மேற்கண்ட மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் அந்த மாநிலங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் பினா செல்லும் பிரதமர், அங்கு 'பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகம்' மற்றும் மாநிலம் முழுவதும் பத்து புதிய தொழில்துறை திட்டங்கள் உட்பட ரூ .50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மத்தியப் மாநிலத்தில் சீரான பிராந்திய வளர்ச்சி மற்றும் சீரான வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஷாஜாபூர், குணா, மௌகஞ்ச், அகர் மால்வா, நர்மதாபுரம் மற்றும் மக்சி ஆகிய ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் சுமார் ரூ .310 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, பிற்பகல் 3:15 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு முக்கியமான ரயில்வே துறை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, சத்தீஸ்கரின் ஒன்பது மாவட்டங்களில் 'அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடங்களுக்கு' பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார், மேலும் ஒரு லட்சம் அரிவாள் செல் நோய்தடுப்பு ஆலோசனை அட்டைகளையும் வழங்குகிறார்.
சத்தீஸ்கரில் தொடங்கப்படவுள்ள ரயில் திட்டங்கள் இப்பகுதியில் பயணிகளின் இயக்கம் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். அதேபோல், பிரதமரின் - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் துர்க், கொண்டகான், ராஜ்நந்த்கான், கரியாபந்த், ஜஷ்பூர், சூரஜ்பூர், சுர்குஜா, பஸ்தர் மற்றும் ராய்கர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.210 கோடிக்கும் அதிகமான செலவில் ஒன்பது அவசர கால சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள் கட்டப்படவுள்ளது.
2 எருமை மாடு; ஒரு கன்றுக்குட்டி திருட்டு: 1965ஆம் ஆண்டு சம்பவத்தில் கைதான முதியவர்!
அரிவாள் செல் ரத்த சோகை நோயால், குறிப்பாக பழங்குடி மக்களிடையே ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், பரிசோதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் அரிவாள் செல் ரத்த சோகை நோய் தடுப்பு ஆலோசனை அட்டைகளையும் பிரதமர் மோடி வழங்கவுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் கடந்த ஜூலை மாதம் பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ் அரிவாள் செல் தடுப்பு ஆலோசனை அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.