2 எருமை மாடு; ஒரு கன்றுக்குட்டி திருட்டு: 1965ஆம் ஆண்டு சம்பவத்தில் கைதான முதியவர்!
எருமை மாடுகள் திருடிய வழக்கில் 78 முதியவர் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் பிதாரில் உள்ள மெஹகர் கிராமத்தில் இரண்டு எருமைகள் மற்றும் ஒரு கன்று திருடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் மகாராஷ்டிர மாநிலம் உதகிரைச் சேர்ந்த கணபதி விட்டல். 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சம்பவத்தின் போது கணபதி விட்டலுக்கு 20 வயது.
இந்த நிலையில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைக்கும் நடவடிக்கையை கர்நாடக மாநில போலீசார் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இரண்டு எருமைகள் மற்றும் ஒரு கன்று திருடப்பட்ட வழக்கில், தற்போது 78 வயதாகும் கணபதி விட்டலை பிதார் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது ஆய்வு செய்து வரும் நீண்ட கால வழக்குகளில் இதுவே மிகவும் பழமையானது.
கர்நாடகாவில் உள்ள பிதார் மாவட்டம் மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லையில் உள்ளதால், மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களுக்கான சூழ்நிலையை இங்கு அதிகம். ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு அண்டை மாநிலங்களுக்கு சென்று தலைமறைவாகி விடுவர்.
கணபதி விட்டலின் சக குற்றவாளியான கிருஷ்ணா சந்தருக்கு 1965ஆம் ஆண்டில் 30 வயது. போலீசாரின் கைதில் இருந்து தப்பிய அவர், 2006ஆம் ஆண்டில் உயிரிழந்து விட்டார். ஆனால், கணபதி விட்டல் மட்டும் இத்தனை ஆண்டுகாலமாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்ததாக பிதார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்னபசவண்ண லங்கோட்டி தெரிவித்துள்ளார்.
வயதைக் கருத்தில் கொண்டு விட்டலுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கணபதி விட்டல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது அவர் தலைமறைவானார். இதனால், கைது வாரண்ட் அமலில் இருந்ததாக காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு: கடன் வாங்கியவர்கள் ஹேப்பி!
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள குர்கி கிராமத்தில் இருந்து எருமைகள் மற்றும் கன்றுகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர் முரளிதர் மணிகராவ் குல்கர்னியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குல்கர்னி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள கணபதி விட்டலின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த முறை அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.