வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி நாடு திரும்பிய உடனே, பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்திக்கச் செல்கிறார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்திலிருந்து திரும்பிய உடனேயே, பிரதமர் மோடி நாளை (ஆகஸ்ட் 26) பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் நிறுவனத்திற்குச் செல்கிறார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரதமர் மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 7:15 மணியளவில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கை (ISTRAC) பார்வையிடுகிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதும் உடனடியாக அவர் பெங்களூரு சென்றடைவார்" எனக் கூறப்பட்டுள்ளது.

"சந்திரயான்-3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்து உரையாடுவார். அப்போது சந்திரயான்-3 திட்டத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 'மூன் வாக்'! பிரக்யான் ரோவர் 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தகவல்

முன்னதாக, ஆகஸ்ட 23 அன்று சந்திராயன்-3 இன் விக்ரம் லேண்டர் நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் நிகழ்வின் போது பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இணைந்திருந்தார். வெற்றிக்குப் பின் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 மூலம் இந்தியாவை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடாக மாற்றியதற்தற்காகப் பாராட்டு தெரிவித்தார்.

"சோமநாத்ஜி உங்கள் பெயர் சந்திரனுடன் இணைந்துள்ளது... உங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் உங்களையும் உங்கள் குழுவையும் வாழ்த்துகிறேன். உங்கள் குழுவிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். முடிந்தால், உங்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார். அதன்படி, உடனடியாக இந்தியாவுக்குப் புறப்பட்டு வருகிறார்.

விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய காட்சியை பார்த்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும் புதிய இந்தியா உருவாகியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது பல நாடுகள் நிலவில் ஆய்வு செய்ய ஊக்கம் அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்டைலாக சூரியனைத் திரும்பிப் பார்த்த பிரக்யான் ரோவர்! லேண்டரில் இருந்து ஈஸியாக இறங்கியது எப்படி?