சந்திரயான்-3 வெற்றி... நான் உடனே கிளம்புறேன்... இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட நாடு திரும்பும் பிரதமர் மோடி!
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டுவதற்காக உடனடியாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறார்.
15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக நாடு திரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பெங்களூருக்கு விமானம் மூலம் வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கும் செல்லும் பிரதமர் மோடி அங்கு உள்ள விஞ்ஞானிகள் அனைவரையும் சந்தித்து, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்து சாதனை படைத்ததற்காக பாராட்டு தெரிவிக்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு முடிந்து பிரதமர் மோடி அங்கே இருந்து கிரீஸ் நாட்டுக்குச் செல்ல இருந்தார். சந்திரயான்-3 வெற்றியால் அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா திரும்பும் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி நேரடியாக கிரீஸ் நாட்டுக்குச் செல்ல இருக்கிறார்.
முன்னதாக, சந்திராயன்-3 இன் விக்ரம் லேண்டர் நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் நிகழ்வின் போது பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இணைந்திருந்தார். வெற்றிக்குப் பின் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 மூலம் இந்தியாவை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடாக மாற்றியதற்தற்காகப் பாராட்டு தெரிவித்தார்.
"சோமநாத்ஜி உங்கள் பெயர் சந்திரனுடன் இணைந்துள்ளது... உங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் உங்களையும் உங்கள் குழுவையும் வாழ்த்துகிறேன். உங்கள் குழுவிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். முடிந்தால், உங்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார். அதன்படி, உடனடியாக இந்தியாவுக்குப் புறப்பட்டு வருகிறார்.
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய காட்சியை பார்த்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும் புதிய இந்தியா உருவாகியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது பல நாடுகள் நிலவில் ஆய்வு செய்ய ஊக்கம் அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிலவைத் தொட்ட சந்திரயான்-3! அடுத்து என்ன நடக்கும்? நிலவில் என்னென்ன ஆய்வுகள் செய்யும்?