சந்திரயான்-3 லைவ் வீடியோவிலும் புதிய மைல்கல்! தரையிறங்கும் காட்சியைக் கண்ட 9.1 மில்லியன் பார்வையாளர்கள்
இஸ்ரோவின் சந்திரயான்-3 லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ ஸ்பெயின் நாட்டின் விண்வெளி பயண நேரலை ஒளிபரப்பின் சாதனையை முறியடித்துள்ளது. இஸ்ரோவின் லைவ் வீடியோவை 9.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
சந்திரயான் 3 தரையிறங்குவதை இஸ்ரோ யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவை 9.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதற்கு முன் ஸ்பெயின் நாட்டின் விண்வெளி மையத்தின் விண்வெளி பயணத்தின் நேரலை ஒளிபரப்பை 3.4 மில்லியன் பேர் பார்வையிட்டதுதான் உலக சாதனையாக இருந்தது. இந்தியா இந்த சாதனையை அடைந்தபோது 80,59,688 பேர் வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பேஸ்புக்கில், சந்திரயான்-3 லேண்டர் சந்திரனின் மேற்பரப்பைத் தொட்டபோது 355,600 க்கும் அதிகமானோர் இஸ்ரோவின் லைவ் வீடியோவை பார்த்தனர்.
சந்திரயான்-3 தரையிறக்கத்தை இஸ்ரோவின் அதிகாரபூர்வ ஒளிபரப்பு சேனல்களில் நேரடியாகப் பார்த்தவர்கள் தவிர, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள ஏராளமான மக்கள் கண்டனர். இந்தியாவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி இந்த முக்கியமான நிகழ்வின் அதிகாரபூர்வமாக நேரடி ஒளிபரப்பு செய்தது.
தூர்தர்ஷன் ஒளிபரப்பை எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற அதிகாரப்பூர்வ எண்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சேனலின் யூடியூப் இணைப்பில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பைத் தொட்டபோது 750,822 பேர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியவுடன் காணொளிக் காட்சி மூலம் இணைந்திருந்த பிரதமர் மோடியுடன் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை அறிவித்தார். "நிலவில் மென்மையான தரையிறக்கத்தை செய்து சாதித்துவிட்டோம்" என்று கூறிய அவர், பிரதமர் மோடி விஞ்ஞானிகளை வாழ்த்திப் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய காட்சியை தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பார்வையிட்டுவந்த பிரதமர் மோடி, இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும் புதிய இந்தியா உருவாகியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது பல நாடுகள் நிலவில் ஆய்வு செய்ய ஊக்கம் அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.