Asianet News TamilAsianet News Tamil

பிரிக்ஸ் மாநாடு: தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்

PM Modi to participate in BRICS summit at south africa
Author
First Published Aug 4, 2023, 11:36 AM IST

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். இந்த மாநாட்டில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பர். பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்படும்.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டில் நேரடியாக நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக, தென்னாப்பிரிக்கக் அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் முப்பதாவது ஆண்டு 2023 ஆம் ஆண்டில் நிறைவடையும் நிலையில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

கர்நாடகாவில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்!

அப்போது, ஆகஸ்ட் 22 முதல் 24ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு வந்து கலந்து கொள்ளுமாறு தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமருக்கு தென்னாப்பிரிக்க அதிபர் விளக்கினார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோகன்னஸ்பர்க் நகருக்குப் பயணிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த பேச்சுவார்த்தையின்போது, பரஸ்பர நலன் கொண்ட பல்வேறு விவகாரங்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய சிக்கல்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தர ஆவலாக இருப்பதாகக் கூறினார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios