கர்நாடகாவில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்!
கர்நாடகாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஐஃபோன்கள் மற்றும் சிப் தயாரிக்கும் இரண்டு திட்டங்களில் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடகாவில் 600 மில்லியன் டாலர் அதாவ இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,938.12 கோடி முதலீடு செய்யவுள்ளது. இந்த முதலீடு, சீனாவை தாண்டி தெற்காசிய பிராந்தியத்தில் அந்த நிறுவனத்தின் வளர்ந்து வரும் ஆர்வத்தை காட்டுவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது: “ஃபாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடகாவில் 2 தொழிற்சாலைகளை அமைக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. முதல் தொழிற்சாலை 250 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) முதலீட்டில் அமைய இருக்கிறது. 2ஆவது தொழிற்சாலை 350 மில்லியன் டாலர் (ரூ.300 கோடி) முதலீட்டில் அமைய உள்ளது.” என்றார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் பெங்களூருவின் ஊரகப்பகுதி மற்றும் தும்கூரில் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐஃபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் 350 மில்லியன் டாலர் முதலீட்டிலான தொழிற்சாலை சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 250 மில்லியன் டாலர் முதலீடு திட்டத்தில் அப்ளைடு மெட்டீரியல்ஸுடன் இணைந்து சிப் தயாரிக்கும் கருவிகளை ஃபாக்ஸ்கான் உருவாக்கும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில், ஃபாக்ஸ்கான், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, செமிகண்டக்டர் உற்பத்தி உபகரணங்களை உருவாக்கும் திட்டத்தில், சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 சதவீத ஐஃபோன்களை அசெம்பிள் செய்வதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கும் ஃபாக்ஸ்கான், கொரோனா இடையூறுகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவை தாண்டி வேறு நாட்டுக்கு உற்பத்தியை மடைமாற்றியுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக, தானும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ரூ.19,000 கோடி சொத்து! இந்தியாவின் 3வது பணக்கார பெண்.. அட நம்ம சென்னையை சேர்ந்தவங்க தான்..
“இந்தியாவில் எங்களது விரிவாக்கத் திட்டங்களுக்கு கர்நாடகா வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு தெரிவித்துள்ளார். வரவிருக்கும் ஆண்டுகளில் பில்லியன் கணக்கான டாலர்களை இந்தியாவின் முதலீடு செய்யவுள்ள மைக்ரான் முதல் அமேசான் வரையிலான வெளிநாட்டு நிறுவனங்களின் வரிசையில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் விரிவாக்கமும் தற்போது இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முதலீட்டாளர்களை ஈர்க்கிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும், 10 பில்லியன் டாலர்கள் மதிப்பில் தாங்கள் செயல்படுத்தவுள்ள திட்டத்துக்கு, செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் ஊக்கத்தொகைக்கும் விண்ணப்பிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சிப் தயாரிப்பு ஆலையை அமைக்க குஜராத் உடன் அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செமிகான் இந்தியா 2023 எனும் இந்திய அரசின் செமிகண்டக்டர் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பல மாநிலங்களின் மூத்த அதிகாரிகளை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருக்கிறார்.
முன்னதாக, 6,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 194 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.