இந்திய தபால் துறையின் `போஸ்ட் பேமென்ட் வங்கி’யை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.  இதை தொடர்ந்து நாடு முழுவதும் இச்சேவை துவக்கி வைக்கப்படுகிறது.

நாட்டின் கிராமப்புறங்களில் 50,000 வங்கி கிளைகள் செயல்படுகின்றன. அதேநேரம், தபால் துறைக்கு கிராமப்புறங்களில் 1,55,000 சேவை மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் வாயிலாக, வங்கி சேவைகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, இந்தியாவில் கிராமப்புற மக்கள் எளிதாக அணுகும் வகையில் வங்கி சேவை இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் மூன்று வகையான சேமிப்பு கணக்கு தொடங் கலாம். வழக்கமான சேமிப்பு கணக்கு உடன், மின்னணு சேமிப்பு கணக்கு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்கு வசதி கிடைக்கும். இக்கணக்குக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும். 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, போஸ்ட் பேமென்ட் வங்கி சேவையை பெறலாம்.

போஸ்ட் பேமென்ட் வங்கிகள் தொடங்கப்படுவதன் மூலம் கிராமப்புற வங்கிச் சேவை மூன்றரை மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வங்கி சேவைக்காக தபால் துறையில் உள்ள 3 லட்சம் பணியாளர்களுக்கு, பயோமெட்ரிக் கருவிகள், கையடக்க கருவிகளை கையாள, சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.  இவர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வங்கி சேவை வழங்குவர் என்பது, இதில் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.