எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை டீல் என்றால் போபர்ஸ் பீரங்கி ஊழல் டீல் தான். நாம் போட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேசுகிறார்கள். இவர்கள் போட்ட போபர்ஸ் ஒப்பந்தம் குறித்து பேசுவோமா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 4) பதிலுரை வழங்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் பேச மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் வரலாற்றில் முதன்முறையாக பிரதமரின் பதிலுரை இல்லாமல் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதால் அவரை தான் வர வேண்டாம் என சொன்னதாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாடளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று (பிப்ரவரி 5) வருகை வந்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து பதிலுரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ''உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி வீறுநடை போட்டு வருகின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கான வளர்ச்சியை அரசு கொடுக்கிறது. அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. நமது நாடு சரியான திசையில் முன்னேறி செல்கிறது. இந்தியா விரைவில் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

எதிர்கால வளர்சியை கருத்தில் கொண்டு ஒப்பந்தங்கள்

இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மட்டுமின்றி மேலும் சில நாடுகளுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தின் வளர்சியை கருத்தில் கொண்டே ஒப்பந்தங்கள் செய்கிறோம். பாஜக ஆட்சிக்காலத்தை போன்று வேறு எந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வளவு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதா?

போபர்ஸ் ஒப்பந்தம் குறித்து பேசுவோமா?

இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம்தாழ்ந்து செயல்படுகின்றன. மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த கட்சிகளும் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளை இந்திய இளைஞர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை டீல் என்றால் போபர்ஸ் பீரங்கி ஊழல் டீல் தான். நாம் போட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேசுகிறார்கள். இவர்கள் போட்ட போபர்ஸ் ஒப்பந்தம் குறித்து பேசுவோமா?

பாரதத்தின் வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகளுக்கு கவலையில்லை

பாரதத்தின் வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்த கவலையும் கிடையாது. இந்தியா குறித்து காங்கிரசுக்கு கவலை கிடையாது. இந்தியாவின் வங்கி கட்டமைப்பை காங்கிரஸ் பாதாளத்தில் தள்ளி விட்டது. நாம் புத்திசாலித்தனமாக வங்கியில் சில சீர்திருத்தங்களை செய்தோம். காங்கிரஸ் ஆட்சியில் கடனில் இருந்த வங்கிகளை மீட்டுள்ளோம். எதிர்க்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தங்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டனர். புதிய வளர்ச்சியை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.