Katchatheevu: தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை - பிரதமர் மோடி மீண்டும் குற்றச்சாட்டு!
தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை என கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் என்பது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் சமையம் என்பதால் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஆனால் உண்மையில் 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகச்சிறிய தீவு தான் இந்த கச்சத்தீவு. இதன் அகலம் 300 மீட்டர், நீளம் 1.6 கிலோ மீட்டர். இந்த சிறிய தீவுக்காக ஏன் இவ்வளவு பிரச்சனை என்பதை விரிவாக பார்க்கலாம்.
கச்சத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. அங்கு அந்தோணியார் கோவில் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மட்டும் திருவிழா நடைபெறும். அதில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் பங்கேற்பார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதியில் அமைந்திருந்தாலும் அது தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த பிரச்சனைக்கு முடிவுகட்டவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் கடல் எல்லை வரையறுக்கப்பட்டு இருக்கும். அதில் பொருளாதார மண்டலமும் அமைந்திருக்கும். அப்பகுதியில் சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. அந்த பொருளாதார மண்டல பகுதிக்கு பின் சர்வதேச எல்லை ஆரம்பிக்கும்.
கச்சத்தீவை பொறுத்தவரை அது மிகவும் குறுகிய இடம் என்பதால் இந்தியாவின் பொருளாதார மண்டலம் முடியும் இடத்திலேயே இலங்கையின் பொருளாதார மண்டலம் ஆரம்பமாகிறது. இதனால் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
இதையும் படியுங்கள்... IAS, IPS அதிகாரிகளுக்கு முதலில் வேலைக்கு சேரும் போது எவ்வளவு சம்பளம்? அதிகபட்சம் எவ்வளவு?
கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது எப்படி?
1974-ம் ஆண்டு தான் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்துள்ளது. அந்த சமயத்தில் இந்திரா காந்தி தான் இந்திய பிரதமராக இருந்து வந்தார். அப்போது இருநாட்டுக்கும் இடையே எல்லை வரையறுக்கப்பட்டு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என முடிவானது. ஆனால் அந்த சமயத்தில் மீன்பிடி உரிமை, விசா இன்றி இந்தியர்கள் கச்சத்தீவுக்கு சென்று வரலாம் போன்றவை நடைமுறையில் இருந்தன. அதன்பின்னர் 1976-ம் ஆண்டு கையெழுத்தான மற்றொரு ஒப்பந்தத்தில் தான் மீன்பிடிக்க அனுமதி மறுக்கட்டது.
1974க்கு முன்னர் வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போது கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. பின்னர் 1972ல் ராமநாதபுரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கச்சத்தீவை தாரைவார்த்தது யார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பிய விண்ணப்பத்தின் மூலம் பல்வேறு பகீர் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில் 1961-ம் ஆண்டு மே 10ந் தேதி அப்போதைய இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமைகளை கைவிடுவதற்கு விருப்பம் காட்டியது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி பல்வேறு வரலாற்று சிக்கல்கள் இருந்தபோதும் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு மீதான உரிமையை இந்தியா விட்டுக்கொடுத்ததாகவும். இதுதொடர்பாக 1968-ம் ஆண்டே இந்திய பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கை பிரதமர் டட்லி சேனாநாயக்கா இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவின் கோரிக்கையை திரும்ப பெறுவதற்கான முடிவை இந்திய வெளியுறவுச் செயலர் கேவல் சிங் கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் முறையாக தெரிவித்திருக்கிறார்.
அப்போது கச்சத்தீவு மீது இந்தியாவின் வரலாற்று உரிமைகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி இலங்கையிடம் அதற்காக சட்டப்பூர்வமான உரிமையை பெற போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் மீறி காங்கிரஸ் எப்படி கச்சத்தீவை விட்டுக்கொடுத்துள்ளது என்பதை இந்த புதிய உண்மைகள் வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் அவர் அந்த பதிவில் சாடி இருக்கிறார். இதனால் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி இன்றும் தனது எக்ஸ் பக்கத்தில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. காங்கிரசும் திமுகவும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அறிவிப்பு!