பிரிக்ஸ் விரிவாக்கம்: இந்தியா ஒத்துழைப்பு - பிரதமர் மோடி!
பிரிக்ஸ் விரிவாக்கத்துக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் 15ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார். இன்று நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் முழு அமர்வுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் விரிவாக்கத்துக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.
பிரிக்ஸ் விரிவாக்கத்தில் ஒருமித்த கருத்துடன் முன்னேறுவதை இந்தியா வரவேற்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த ஐந்து நாடுகளின் சமூகங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியதுடன், ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்ட குழுவின் விரிவாக்கத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றார். “பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது; ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முன்மொழிவை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறது.” என பிரதமர் மோடி கூறினார்.
பிரிக்ஸ் அமைப்பில் தற்போது, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
உலக சமுதாயம் சிந்தித்து எதிர்காலத்திற்குத் தன்னைத் தயார்படுத்தும் போதுதான் பிரிக்ஸ் அமைப்பும் எதிர்காலத்திற்குத் தயாராகும் என்று பிரதமர் மோடி தனது உரையின் போது கூறினார். பிரிக்ஸ் அமைப்படி எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் அமைப்பாக மாற்ற, அந்தந்த நாடுகளின் சமூகங்களையும் எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் அதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
சந்திரயான்-3: லேண்டரின் வருகைக்காக காத்திருக்கும் இஸ்ரோ!
சுமார் 20 ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பு ஒரு நீண்ட மற்றும் அற்புதமான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில், நாம் எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் நிரந்தர உறுப்பினராக்கும் இந்தியாவின் முன்மொழிவுக்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் தென்னாப்பிரிக்கா தலைமையின் கீழ் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கையை வரவேற்ற மோடி, இந்தியா தனது ஜி 20 தலைவர் பதவியிலும், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்றார்.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, “பிரிக்ஸ் எண்ணத்திற்கு புதிய பாதையை வழங்குவதற்காக, ரயில்வே ஆராய்ச்சி நெட்வொர்க், எம்எஸ்எம்இகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு, ஆன்லைன் பிரிக்ஸ் தரவுத்தளம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போன்ற விஷயங்களில் இந்தியா பரிந்துரைகளை முன்வைத்தது. இந்த விவகாரங்களில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.