2022ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் மார்ச் 2ஆம் தேதி இந்தியக் கட்டுமானத் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி , “இந்தியாவில் நகரமயமாதல் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உலக அளவிலான வீட்டு வசதி தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. 

‘அனைவருக்கும் வீடு’ உள்ளிட்ட பல திட்டங்களின் செயல்பாடுகள் வீடமைப்புத் துறையில் மாற்றம் கொண்டுவருவதாக உள்ளன. மாறுபட்ட புவி நிலைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சவாலாக இருக்கிறது. குறைந்த செலவில் வீட்டு வசதி, திறன் மேம்பாடு, வீட்டு வசதித் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

2022ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும். இந்தக் காலகட்டத்திற்குள் சுமார் 1.3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். வரி மற்றும் இதர சலுகைகள் மூலம் மக்கள் வீடுகள் வாங்குவதையும் எனது அரசு எளிதாக்கி வருகிறது. 

மேலும், ரியல் எஸ்டேட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வீடு கட்டுவோர் மீது பயனாளிகளுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதோடு, ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மை வந்துள்ளது என்ற அவர், 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான காலம் கட்டுமானத் தொழில்நுட்ப ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.