கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், 'ஓர் ஏக்கர், ஓர் பருவம்' என்ற புதிய இலக்கை விவசாயிகளுக்கு அளித்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற 'தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாடு 2025' குறித்த தனது அனுபவங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று LinkedIn தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவர் விவசாயிகள் 'ஓர் ஏக்கர், ஓர் பருவம்' என்ற புதிய இலக்கினை வலியுறுத்தி, அனைவரும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவையில் மறக்க முடியாத மாநாடு

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னைச் சந்தித்த தமிழக விவசாயிகள், நிலைத்தன்மை மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க புதிய வேளாண் நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, நவம்பர் 19 அன்று கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாடு 2025-இல் தாம் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"சிறு, குறு தொழில் நிறுவனங்களின் முதுகெலும்பாக அறியப்பட்ட கோயம்புத்தூர், இயற்கை விவசாயம் குறித்த பெரிய நிகழ்ச்சிக்கு நடத்தியது மனநிறைவை அளித்தது. விஞ்ஞானிகள், முதல் தலைமுறை பட்டதாரிகள், மற்றும் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலைகளை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்பவர்கள் எனப் பலரை நான் அங்கு சந்தித்தேன். இந்த மாநாடு என் நினைவில் நீங்கா இடத்தைப் பிடிக்கும்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

"இயற்கை விவசாயம் என்பது, செயற்கை இரசாயனப் பொருட்கள் இல்லாமல் பயிர்களைப் பயிரிடும் இந்தியாவின் பாரம்பரிய முறையாகும். இது, பண்ணைக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலமும், மண்புழு உரம், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் மண்ணின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் இணைந்து பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஆதரவளிக்கும் பன்முகத் தன்மையைக் கொண்ட வயல்களை இது வளர்க்கிறது," என்று பிரதமர் மோடி விளக்கினார்.

ஓர் ஏக்கர், ஓர் பருவம் (One Acre, One Season)

அவர் தனது பதிவில், "ஓர் ஏக்கர், ஓர் பருவம்" என்ற முழக்கத்துடன், "விவசாயிகள் ஓர் ஏக்கர் பரப்பில் ஒரு பருவத்தில் மட்டும் இயற்கை விவசாயத்தை செய்து பார்க்கத் தொடங்குமாறு நான் ஊக்குவித்தேன். ஒரு சிறிய நிலத்தில் கிடைக்கும் விளைச்சல்கூட நம்பிக்கையை ஏற்படுத்தி, பெரிய அளவில் இயற்கை விவசாயத்திற்கு மாறத் தூண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இயற்கை விவசாயத் துறையில் புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுடன் (FPO-க்கள்) இணைந்து செயல்படவும் இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசின் ஆதரவும், நன்மைகளும்

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகச் சார்ந்து இருப்பது மண்ணின் வளம் மற்றும் நிலைத்தன்மையை பாதிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இயற்கை விவசாயம் இந்த சவால்களை நேரடியாக எதிர்கொள்ளும் என்றார்.

மத்திய அரசின் தேசிய இயற்கை விவசாய இயக்கம் லட்சக்கணக்கான விவசாயிகளை நிலைத்தன்மை கொண்ட நடைமுறைகளுடன் இணைத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

கிசான் கிரெடிட் கார்டு மற்றும் பிஎம்-கிசான் போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள், இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளிப்பதாகக் கூறினார்.

பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்ற பாரம்பரிய இடுபொருட்களைப் பயன்படுத்துவது மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, இரசாயனத் தாக்கத்தைக் குறைக்கிறது, மேலும் உற்பத்தி செலவைக் குறைக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உச்சி மாநாட்டின்போது, நாடு முழுவதும் உள்ள 9 கோடி பிஎம்-கிசான் பயனாளிகளுக்கு ரூ.18,000 கோடி மதிப்பிலான 21வது தவணையையும் பிரதமர் மோடி விடுவித்தார்.