ஜி7 உச்சி மாநாடு: உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே உலகத் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் பிரதமர் மோடி பேச்சிவார்த்தை நடத்தினார்

PM Modi met world leaders in sidelines of G7 Summit smp

நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதையடுத்து, தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார். இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் உள்ள போர்கோ எக்னாசியா என்ற சொகுசு ரிசார்ட்டில் நடைபெறும் மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி7 நாடுகள் கலந்துகொண்டுள்ளன.

அதுதவிர, உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.

இத்தாலி பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பிராந்தியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் முடிவுகள் மற்றும் வரவிருக்கும் ஜி 7 உச்சிமாநாட்டின் முடிவுகளுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்பைக் கொண்டுவரவும், உலகளாவிய தெற்கிற்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்கும் மற்ற தலைவர்களுடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே உலகத் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் பிரதமர் மோடி பேச்சிவார்த்தை நடத்தினார்.

இங்கிலாந்து பிரதமர் உடனான சந்திப்பு


அதன்படி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வகையில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்துத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

 

 

2030 ஆம் ஆண்டை நோக்கிய செயல்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்த அவர்கள், வழக்கமான உயர்நிலை அரசியல் ஆலோசனைகள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, உயர் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவை குறித்தும் இந்த அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பிரான்ஸ் அதிபருடன் சந்திப்பு


பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடியும் இன்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு, இம்மானுவேல் மேக்ரோன் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், அதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

'ஹொரைசன் 2047' செயல்திட்டம் மற்றும் இந்தோ-பசிபிக் செயல்திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் தேசிய அருங்காட்சியகம் தொடர்பான கூட்டு செயல்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

 

 

செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். 2025-ம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் ஐநா பெருங்கடல் மாநாடு ஆகியவை தொடர்பாக இருநாடுகளும் இணைந்து பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இரு தலைவர்களும், முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். நிலையான மற்றும் வளமான உலக அமைப்பிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வலுவான மற்றும் நம்பகமான உத்திசார் கூட்டு செயல்பாடு முக்கியமானது என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பும் நெருக்கமாக பணியாற்றுவது எனவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். பாரீஸில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது தொடர்பாக  அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

 

 

அதேபோல், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் பற்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதிக்கான வழி காண வேண்டும் என இந்தியா சார்பாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

ஜி7 உச்சி மாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஆகியவை ஜி7 உச்சிமாநாட்டில் அதிகம் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ரஷ்ய படையெடுப்பு குறித்து ஜி7 அமர்வில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios