காங்கிரஸ் ரகசியம் அடங்கியிருக்கும் ‘சிவப்பு டைரி’: பிரதமர் மோடி பேச்சு!
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் பூதாகரமாகியுள்ள சிவப்பு டைரி குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இன்று சென்றுள்ளார். ராஜஸ்தானின் சிகார் நகரில் விவசாயிகளுக்கான 1.25 லட்சம் பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திராக்களை அவர் திறந்து வைத்த அவர், அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார். ராஜஸ்தான் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு குஜராத் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் பூதாகரமாகியுள்ள சிவப்பு டைரி குறித்து பேசினார். காங்கிரஸின் இருண்ட செயல்கள் சிவப்பு டைரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் என்று, பிரதமர் மோடி கூறினார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராஜேந்திர குதா அம்மாநில சட்டசபையில் சிவப்பு டைரி ஒன்றை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தான் வெளியிட்ட சிவப்பு டைரியில், முதல்வர் அசோக் கெலாட்டின் முறைகேடான நிதி பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் அடங்கியிருப்பதாக அவர் கூறினார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில சட்டம்-ஒழுங்கு குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்ட-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பாஜகவினர் அசோக் கெலாட் அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், வெளியாகியிருக்கும் சிவப்பு டைரி அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அந்தவகையில், பிரதமர் மோடியும் சிவப்பு டைரி குறித்து பேசியுள்ளார். சிவப்பு டைரி என்பது பொய்கள் நிரம்பிய காங்கிரஸின் புதிய திட்டம் என பிரதமர் மோடி கூறினார். அந்த சிவப்பு டைரியில் காங்கிரஸின் இருண்ட பக்கங்கள், செயல்கள் பதிவாகி உள்ளதாகவும், மாநிலத் தேர்தலில் அக்கட்சியை அது தோற்கடிக்கும் என்றும் மோடி கூறினார்.
மணிப்பூர் செல்லும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைவாய்ப்பு தேர்வுக்கான தாள்கள் கசிந்த விவகாரத்திலும் கெலாட் அரசை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். “ராஜஸ்தானில் தேர்வுத்தாள் கசிவு தொழில் நடந்து வருகிறது. இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்.” என்றார்.
“சகோதரிகள் மற்றும் மகள்கள் மீதான அட்டூழியங்களை ராஜஸ்தான் பொறுத்துக்கொள்ளாது. இன்று ராஜஸ்தானில் ஒரே குரல், ஒரே முழக்கம், தாமரை வெல்லும், தாமரை மலரும்.” என்பதுதான் என்றும் பிரதமர் மோடி அப்போது சூளுரைத்தார்.
முன்னதாக, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச மாட்டார்; ஆனால், ராஜஸ்தானில் அரசியல் பேசுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.