ரூ.13,000 கோடி மதிப்பிலான விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்
பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைநகர் டெல்லியில் தொடங்கி வைத்திருக்கிறார்.
சென்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, விஸ்வகர்மா திட்டம் பற்றி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மோடி தலைமையில் நடைபெற்ற மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று வடமாநிலங்களில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், "பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்" எனக் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு மாற்றுத் திறனாளி குழந்தைகள் எழுதிய 1.25 கி.மீ. நீள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம்!
"இத்திட்டத்தின்படி விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்." என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு திரிப்பவர்கள், பொம்மை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூ கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், சுத்தியல் போன்ற கருவிகள் தயாரிப்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் என பல தொழிலாளர்கள் பயன்பெற முடியும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக பிரதமர் மோடி டெல்லி யஷோபூமி துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில், புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் திறந்து வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பயணிகளுடன் உரையாடினார். பயணிகளும் பிரதமருடன் பேசிய அவரோடு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
புதிய இந்தியாவின் சிற்பி! 73வது பிறந்தநாளில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து மழை பொழிந்த தலைவர்கள்!