பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி!
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றடைந்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி (இன்று) முதல் 24ஆம் தேதி வரை 15ஆவது பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டில் பிரிக்ஸ் மாநாடு நேரடியாக நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்கவுள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 8 மணியளவில் டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறேன். BRICS-Africa Outreach மற்றும் BRICS Plus உரையாடல் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளேன். உலகளாவிய தெற்கு மற்றும் பிற பகுதிகளின் வளர்ச்சி குறித்தும் விவாதிப்பதற்கான மேடையை பிரிக்ஸ் உச்சிமாநாடு வழங்கும்.” என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு துணை அதிபர் வரவேற்றார். மேலும், விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்க பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி தான் தங்கவுள்ள ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த தென் ஆப்பிரிக்க வாழ் இந்தியர்கள், வந்தே மாதரம் முழக்கம் எழுப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் கை குலுக்கி சிறிது நேரம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி தங்கியிருக்கும் சாண்ட்டன் சன் ஹோட்டல் முன்பும் தென் ஆப்பிரிக்க வாழ் இந்தியர்கள் திரண்டிருந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். “பிரதமர் முன்னிலையில் இருப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை. அவர் ஒரு அற்புதமான மனிதர் மற்றும் என் ஹீரோ.” என தென் ஆப்பிரிக்க வாழ் இந்திய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரதமர் மோடிக்கு சிறப்பான ஆன்மீக வரவேற்பும் அளிக்கப்பட்டது.
விட்டுப்போன உறவுகள் புதுப்பிக்கப்படுமா? பிரதமர் மோடியின் கிரீஸ் பயணம் என்ன கூறுகிறது?
பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் உரையாடல் நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் மதெமெலா சிரில் ராமபோசா அளிக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் மோடி தனது தென் ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 25ஆம் தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்லவுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுடன் பல நூற்றாண்டுகளாக நாகரீகத் தொடர்பு கொண்டுள்ள கிரீஸ் நாட்டுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி செல்லவுள்ளேன். அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடனான பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறேன். அங்குள்ள இந்திய சமூகத்துடனும் உரையாடவுள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.