பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நல்லாட்சி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வரிச் சீர்திருத்தங்கள் போன்ற சாதனைகளை அவர் எடுத்துரைத்தார்.

தலைநகர் டெல்லியில் தீன் தயாள் உபாத்யாயா மார்க்கில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள டெல்லி பாஜக அலுவலகத்தை இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுகள் நாட்டில் ஒரு புதிய நல்லாட்சி மாதிரியை வழங்கியுள்ளதாகவும், அது வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற தாரக மந்திரத்துடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

வரிச் சீர்திருத்தங்கள்:

"நாட்டின் பாதுகாப்பிற்கும், குடிமக்களின் பாதுகாப்பிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிக முன்னுரிமை அளித்துள்ளது. நாட்டைக் 'கொடூரமான ஊழல்' மற்றும் 'பெரிய ஊழல்'களிலிருந்து விடுவித்து, ஊழலுக்கு எதிரான தீர்க்கமான போரில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது."

"நல்லாட்சியின் மற்றொரு வலுவான அம்சம் என்னவென்றால், அரசாங்கத்தின் கவனம் சேவை வழங்கல் மற்றும் சாதாரண மக்களின் சேமிப்பை அதிகரிப்பதில் உள்ளது. 2014-க்கு முன்னர், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரிக்கு உட்பட்டதாக இருந்தது. ஆனால், இன்று தனிநபர்கள் ரூ.12 லட்சம் வரை எந்த வருமான வரியும் செலுத்தாமல் சம்பாதிக்க முடியும்."

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் அடுத்த கட்டம் குறித்துப் பேசிய பிரதமர், அதன் பலன்கள் நேரடியாகச் சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்காக நுகர்வோர் மற்றும் கடைக்காரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில், ஜிஎஸ்டி குறைப்புகள் பொதுமக்களுக்குக் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, அரசாங்கத்தை அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொண்டர்களுக்குப் பாராட்டு:

பிரதமர், 'ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார்' (ஆரோக்கியமான பெண், வலிமையான குடும்பம்) இயக்கம் பற்றிப் பேசுகையில், இது பெண்களின் சுகாதாரப் பரிசோதனைக்கான ஒரு பெரிய முயற்சி என்றார். இதுவரை, மூன்று கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவச சுகாதாரப் பரிசோதனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், காசநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய இது மிகவும் உதவியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

"நவராத்திரியின் புனிதமான நேரத்தில் டெல்லி பாஜக ஒரு புதிய அலுவலகத்தைப் பெற்றுள்ளது" என்று வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், 1980-ல் பாஜக தொடங்கப்பட்டதில் இருந்து 45 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது என்றார். டெல்லி பாஜகவின் பலம் அதன் எண்ணற்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவே என்றும் அவர் குறிப்பிட்டார். தற்சார்பு பாரதத்தை உருவாக்குவதற்கும், சுதேசி முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த அலுவலகத்துக்கு 2023-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.