உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த பாலத்தின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

World's Tallest Chenab Railway Bridge Inaugurated: உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி பாலத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகின் உயரமான பாலத்தை திறந்து வைத்த மோடி

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்வே இணைப்பு (யுஎஸ்பிஆர்எல்) திட்டத்தின் முக்கிய அங்கமாகும். செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் பாரீஸீல் உள்ள ஈபிள் கோபுரத்தை விட உயரமானதாகும். ரூ.1486 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் நீளம் 1,315 மீட்டர். செனாப் பாலம் இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல், பொறியியல் சிறப்பில் உலகளாவிய வரைபடத்தில் நாட்டை முக்கிய இடத்திற்கு உயர்த்தும்.

பிரதமர் மோடி பெருமிதம்

கத்ராவுக்கும் ஸ்ரீநகருக்கும் இடையில் செனாப் பாலம் அமைந்துள்ளது. ரூ.46,000 கோடி மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திறந்து வைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். செனாப் ரயில் பாலம் ஜம்முவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். சவாலான நிலப்பரப்பில் இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டேட் ரயில் பாலமாக செனாப் உயர்ந்து நிற்கும் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கட்டிடக்கலையின் அற்புதம் செனாப் பாலம்

பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தை ஒரு கட்டிடக்கலையின் அற்புதம் என்று பாராட்டிய பிரதமர் அலுவலக அறிக்கை, இது ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது என்று குறிப்பிட்டது. இது நில அதிர்வு மற்றும் காற்று நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 1,315 மீட்டர் நீளமுள்ள எஃகு வளைவு பாலமாகும்.

ரூ.43,780 கோடி செலவில் ரயில் இணைப்பு திட்டம்

சுமார் ₹43,780 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) பாதையில் 36 சுரங்கப்பாதைகள் (119 கி.மீ நீளம்) மற்றும் 943 பாலங்கள் உள்ளன. பிராந்திய இயக்கத்தை மாற்றுவதையும் சமூக-பொருளாதார ஒருங்கிணைப்பை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே அனைத்து வானிலைக்கும் ஏற்ற, தடையற்ற ரயில் இணைப்பை நிறுவுகிறது.