பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஜூலை 14: சந்திரயான்-3 வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து!
நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது. இதற்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது.
இன்னும் சற்று நேரத்தில் சந்திரயான்-3 வின்கலம் விண்ணில் பாயவுள்ள நிலையில், இத்திட்டம் வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் 14 ஜூலை 2023 எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். நமது மூன்றாவது நிலவுப் பயணமான சந்திரயான்-3, அதன் பயணத்தை தொடங்கவுள்ளது. சந்திரயான்-3 நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்.” என பதிவிட்டுள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திரயான்2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவில் சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியது. அதேசமயம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டரானது நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சந்திரயான்-3 வின்கலம் இன்று விண்ணில் பாயவுள்ளது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. இதில் 7 வகையான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதியில் சந்திரயானின் லேண்டர் கலனை மென்மையாக தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோவின் கனவு திட்டம்! இன்று விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3! உற்று நோக்கும் உலக நாடுகள்..!
சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள ரோவர் நிலவின் நிலப்பரப்பில் சுற்றி, அதை பகுப்பாய்வு செய்யும். அதில், கிடைக்கும் தகவல்கள் ரோவரிலிருந்து லேண்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தத் தரவுகள் நிலவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்கனவே சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டருக்கு அனுப்பப்படும். அங்கிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு இந்தத் தரவுகள் வந்தடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப்பின் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4ஆவது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.