இந்திய சீன எல்லையில் மேலும் ஏழு சுரங்கப்பாதைகள்; மத்திய அரசின் சூப்பர் பிளான்!!
இந்தியா, சீனா எல்லையில் எப்போதும் பதற்றம் நிலவி வரும் நிலையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக இந்தியா-சீனா எல்லையில் ஏழு புதிய சுரங்கப்பாதைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்தார்.
"கடந்த மூன்று ஆண்டுகளில், ஐந்து சுரங்கப்பாதைகள் நிறைவடைந்துள்ளன. பத்து தற்போது கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஏழு சுரங்கப்பாதைகளுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் அஜய் பட் கூறினார். இந்த சுரங்கப்பாதைகள் எல்லையில் விரைவான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்றார்.
இந்த முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் அடல் சுரங்கப்பாதை 9.02 கிமீ நீளம் கொண்டது, இது 2020-ல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் லஹவுல்-ஸ்பிடி பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்தை வழங்குகிறது. அசாமில் உள்ள குவஹாத்தி மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் இடையே இணைப்பை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சேலா சுரங்கப்பாதை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருட்டைத் தடுக்க வித்தியாசமான ஐடியா! தக்காளி தோட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்திய ஹைடெக் விவசாயி!
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், எல்லையில் சாலை அமைப்பதற்கான முக்கியவத்தை உணர்ந்து பல்வேறு கட்டமைப்பு பணிகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. 2013-14 பட்ஜெட்டில் ரூ. 3,782 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இது, 2023-24 ஆம் ஆண்டில் ரூ.14,387 கோடியாக உயர்த்தப்பட்டது. அதாவது நான்கு மடங்காக அதிகரித்து நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது.
நிர்ணயிக்கப்பட்ட பாலங்களின் நீளம் 2008 மற்றும் 2014 க்கு இடையில் 7270 மீட்டராக இருந்த நிலையில், 2014-2022 ஆம் ஆண்டுகளில் 22439 மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். கூடுதலாக, அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 1,800 கிமீ நீளமுள்ள எல்லைப்புற நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பள்ளத்தாக்குகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.
இரண்டு மணிப்பூர்களை உருவாக்கிய மத்திய அரசு: கவுரவ் கோகாய் குற்றச்சாட்டு!
பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிப்பு, விரைவான கட்டுமானம், புதுமையான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் விரைவான நிர்வாக அனுமதி ஆகியவை நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன என்று அமைச்சர் அஜய் பட் தெரிவித்தார்.
எல்லையில் சீனாவுடன் பதற்றம் ஏற்பட்டால், ராணுவ தளவாடங்களை எளிதில் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. சுரங்கப்பாதைகள் இந்த சிக்கலை இந்தியா ராணுவத்துக்கு தீர்த்து வைக்கும். மேலும், சீனாவுக்கு சவாலாக இந்த சுரங்கப்பாதைகள் அமையும் என்று கூறப்படுகிறது.