எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி ஒப்பந்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இந்தியா சார்பில் இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்கிறார். இந்த மாநாடு காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது.

எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு வந்துள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

பிரதமர் மோடி நேரில் கலந்துகொள்ளாத நிலையில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்தியா சார்பில் மாநாட்டில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் எல்-சிசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்குகின்றனர். இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காசா அமைதி ஒப்பந்தம்

காசா பகுதியில் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மத்தியக் கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவதற்கும் இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என நம்பப்படுகிறது.

இஸ்ரேலின் போர் நிறுத்தத்தை அடுத்து, இடம்பெயர்ந்த பாலஸ்தீனக் குடும்பங்கள் மீண்டும் தாங்கள் வசித்த காசா பகுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டைப் புறக்கணிக்கும் ஹமாஸ்

பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸ், டிரம்ப்பின் திட்டத்தில் உள்ள சில முக்கியப் அம்சங்களில் உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளது. எனவே இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மேலும், காசாவிலிருந்து ஹமாஸ் வெளியேற வேண்டும் என்பதையும் ஹமாஸ் தலைவர்கள் அபத்தமானது என்று நிராகரித்துள்ளனர். இது அமைதி முன்னெடுப்பில் உள்ள சிக்கல்களை உணர்த்துகிறது.

முன்னதாக, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது நடத்திய தொடர் மோதல்களுக்குப் பின்னரே இந்த மாநாடு நடக்கிறது. ஹமாஸ் பிடித்துவைத்திருந்த 47 இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. 1,700 காசா மக்களையும் விடுவிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.