Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி தொடர்பான டீப் ஃபேக் வீடியோ யாருடையது? உடைந்தது ரகசியம்!!

கடந்த வாரம் பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடுவது போன்று வெளியாகி இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை கிளப்பி இருந்தது. ஆனால், அந்த வீடியோவில் நடனம் ஆடி இருப்பது யார் என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

PM Modi deepfake Video: Vikas Mahante says not deepfake video it was me!!
Author
First Published Nov 22, 2023, 1:40 PM IST

பிரதமர் மோடி கர்பா நடனம் ஆடுவது போன்று வெளியாகி இருந்த வீடியோவுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (deepfake) வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு நடிகர் அமிதாப்பச்சன் முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதுபோன்று வீடியோ தயாரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் எச்சரித்து இருந்தது. இதற்கிடையே, பிரதமர் மோடி தொடர்பான வீடியோவும் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசி இருந்த பிரதமர் மோடி, ''பள்ளியில் இருந்து வெளியேறிய பின்னர் நான் கர்பா நடனம் ஆடுவதில்லை. நானும் டீப் ஃபேக் வீடியோவுக்கு பலியாகி இருக்கிறேன். இதுதொடர்பாக ஊடகங்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் '' என்று கேட்டுக் கொண்டு இருந்தார். 

முதலில், பிரதமர் மோடியை வைத்தும் டீப் ஃபேக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று கருதப்பட்டது. ஆனால், அந்த வீடியோ டீப் ஃபேக் இல்லை என்பதும் பிரதமரைப் போன்றே இருக்கும் தொழிலதிபர் விகாஸ் மஹந்தே என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு விகாஸ் விளக்கம் அளித்துள்ளார். 

டீப் ஃபேக்குகளுக்கு எதிராக புதிய சட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

மும்பையில் இருக்கும் மலாடில் ஸ்டீல் பேக்கேஜிங் தொழிலை நடத்தி வருபவர் விகாஸ் மஹந்தே. இவர் உருவத்தில் மோடியைப் போன்றே இருப்பதால், இவரது செல்வாக்கும் சமூகத்தில் பெருகியது. மோடியின் தோற்றத்தில் இருப்பதால் தங்களது வீடுகளின் விசேஷங்களுக்கு விகாசை அழைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் லண்டனில் இருக்கும் பங்கஜ் சோதா குடும்பத்தினர் தீபாவளிக்கு முந்தைய பண்டிகைகளில் பங்கேற்க லண்டனுக்கு வருமாறு விகாஸ் மஹந்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த விழாக்களில் பங்கஜ் சோதா குடும்பத்தினருடன் விகாஸ் மஹந்தே கர்பா நடனம் ஆடியுள்ளார். இது வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் பின்னர் சர்ச்சைக்கும் வழி வகுத்தது. 

கடந்த திங்களன்று இந்த வீடியோ குறித்து விகாஸ் தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமரை விட 10 வயது இளையவரான விகாஸ் மஹந்தே தவறை தெளிவுபடுத்தும் வீடியோ வெளியிட்டார். "இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நான் அடிக்கடி அழைக்கப்படுகிறேன், அங்கு நான் மோடிஜியின் எண்ணங்களையும் யோசனைகளையும் தெரிவிக்க முயற்சிக்கிறேன். வீடியோ போலியானது அல்ல. அந்த வீடியோவில் இருப்பது நான், விகாஸ் மஹாந்தே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு கலைஞன்'' என்று தெரிவித்துள்ளார்.

அவர் பிரதமரைப் போலவே உடையணிந்து காட்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் பிரதமர் நடனமாடுகிறார் என்ற தவறான பிம்மத்தை கட்டமைக்கிறது. 

என்னயவே டீப் ஃபேக் செஞ்சிட்டாங்க; ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி!

2013ஆம் ஆண்டு காந்திநகரில் குஜராத் எம்எல்ஏ ராமன்பாய் பட்கர் மோடியிடம் தன்னை அறிமுகப்படுத்தியதாக விகாஸ்  கூறுகிறார். பாஜக ஆதரவாளர்களால் அழைக்கப்படும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் விகாஸ் பிஸியாக இருக்கிறார். நவம்பரில் மட்டும் லண்டனில் நடந்த நிகழ்ச்சி உட்பட 8 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். டிசம்பர் முதல் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு புக் ஆகி இருப்பதாக விகாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிக்கு பாஜகவினர் செல்லும்போது உடன் செல்லும் விகாஸ் டிரக்குகளில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பார், தேவைப்பட்டால் பேசுவார். இந்த முறையும் அவ்வாறு செய்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios