டீப் ஃபேக்குகளுக்கு எதிராக புதிய சட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
டீப் ஃபேக்குகளுக்கு எதிராக தேவைப்பட்டால் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக்குகள் மூலம் உருவாக்கப்படும் போலியான தகவல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், டீப்ஃபேக்குகள் அல்லது தவறான தகவல்கள் இந்தியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அரசாங்கம் தொடர்ந்து கட்டமைப்பை உருவாக்கும் என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
“இந்திய இணையத்தை உபயோகிக்கும் 1.2 பில்லியன் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு சவாலாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ டீப்ஃபேக்குகள் அல்லது தவறான தகவல்கள் இருக்கக் கூடாது என்பதற்காக புதிய சட்டத்தை உருவாக்குவது உட்பட ஒரு கட்டமைப்பை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்.” என்று அமைச்சர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு என்பது அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் புதுமைக்கான கருவியாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிற வகையான அம்சங்களை பயன்படுத்தி தீங்கு, சமூகத்தில் குழப்பம், சீர்குலைவு, வன்முறையைத் தூண்டுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் டீப்ஃபேக்குகளை பயன்படுத்தி போலி தகவல்கள் பரப்பும் கும்பலும் இணையதளத்தை உபயோக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாதூ என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சுட்டிகாட்டினார்.
இணையத்தைப் பயன்படுத்தும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு பெரும் ஆபத்தாக அவர்கள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே மிகவும் கடினமாக உழைத்து ஏப்ரல் 2023 இல் தகவல் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, டீப்ஃபேக்குகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் மனித குலத்திற்கு மிக முக்கியமான அச்சுறுத்தலாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டீப் ஃபேக்குகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தினார். தனது தனிப்பட்ட அனுபவத்தை அப்போது பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, தன்னை போல் உருவாக்கப்பட்ட போலி கார்பா நடனமாடுவது போன்ற வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்ததாக தெரிவித்தார்.
ஆர்ஆர்டிஎஸ் திட்ட நிதி: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
நமது நாட்டில் ஒரு பெரும்பாலானோருக்கு ஒரு விஷயத்தை சரிபார்ப்பதற்கான விருப்பம் இல்லை. மக்கள் பெரும்பாலும் டீப் ஃபேக்குகளை நம்புகிறார்கள், இது சமூகத்தில் கொந்தளிப்பையும் அமைதியின்மையையும் உருவாக்கக்கூடும் என்று அவர் எச்சரித்திருந்தார். செயற்கை நுண்ணறிவின் எதிர்மறையான பக்கங்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகை கஜோல் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளின் போலி வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.