ஆர்ஆர்டிஎஸ் திட்ட நிதி: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதியை வழங்காத டெல்லி அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது
ஆர்ஆர்டிஎஸ் திட்டமானது, டெல்லியை உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட், ராஜஸ்தானின் அல்வார் மற்றும் ஹரியானாவில் உள்ள பானிபட் வரை இணைக்கும் அரை-அதிவேக ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது. தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (என்சிஆர்டிசி), மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கூட்டு முயற்சியாக இந்த திட்டத்தின் ஒருபகுதியான டெல்லி - மீரட் வழித்தடம் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ளது.
இந்த திட்டத்துக்கு டெல்லி அரசாங்கம் அதன் செலவினங்களில் ரூ.1,180 கோடியை அளிக்க ஒப்புக் கொண்டது. இருப்பினும், மீதமுள்ள இரண்டு பகுதிகளுக்கு நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ள டெல்லி அரசாங்கம் மறுத்து விட்டது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்.ஆர்.டி.எஸ் திட்டத்தின் கட்டுமானத்தில் பங்களிக்க இயலாமையை வெளிப்படுத்தியதற்காக டெல்லி அரசாங்கத்தை முன்பு சாடியது. மேலும், கடந்த மூன்று நிதியாண்டுகளில் விளம்பரங்களுக்காக டெல்லி அரசு செலவழித்த தொகைக்கான விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதன்படி, விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் குறித்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி அரசு கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக ரூ.1,100 செலவழித்ததை குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு வழங்கும் நிதி அதனை விட குறைவு என சுட்டிக்காட்டியது. மேலும் திட்டத்திற்கு இரண்டு மாதங்களுக்குள் ரூ.415 கோடி வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2024 பட்ஜெட் வாக்கெடுப்பை சீர்குலைக்க முயற்சி: அல்பேனிய நாடாளுமன்றத்தில் தீ வைத்த எம்.பி.க்கள்!
இந்த நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதியை வழங்காத டெல்லி அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் நிதியை மாற்றாவிட்டால், டெல்லி அரசின் விளம்பர நிதியை RRTS திட்டத்திற்கு மாற்ற உத்தரவிடப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் டெல்லி அரசை எச்சரித்துள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகையின் கீழ் டெல்லி - மீரட் வழித்தடத்துக்கான முதல் தொகையான ரூ.265 கோடியை சுற்றுச்சூழல் இழப்பீட்டுக் கட்டண (ECC) நிதியில் இருந்து டெல்லி அரசு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்தியது. இதையடுத்து, அந்த நிதியில் இருந்து கூடுதலாக ரூ.500 கோடி எடுக்க ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கான நிதியை ஒதுக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறது.
இதனிடையே, உத்தரபிரதேசத்தில் ஷாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ ரயில் நிலையங்களை இணைக்கும் சேவையை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், இந்தியாவில் மிதல் பிராந்திய விரைவு ரயில் சேவை (ஆர்ஆர்டிஎஸ்) செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.