இலவசங்களை மீண்டும் விமர்சித்த பிரதமர் மோடி!

எதிர்க்கட்சிகளின் இலவச அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

PM Modi crticised freebies again in madhya pradesh

பிரதமர் மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, புதிய  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில், புதிய சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, இலவச மின்சாரம், கட்டணமில்லா பேருந்து வசதி போன்ற வாக்குறுதிகள் ஏமாற்று வேலை என்று விமர்சித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட வாரிசு அரசியலை மையமாக கொண்ட கட்சிகள், மக்களை கவர்வதற்கு போலி வாக்குறுதிகளை அளிப்பதாக கூறிய அவர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

தொழில்துறை மற்றும் வணிகத்தை பாழாக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் புகைப்படக்காட்சிக்காக கைகோர்த்துள்ளனர் என்றும் சாடினார்.

ராஜினாமா முடிவை கைவிட்டது ஏன்? மனம் திறந்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்!

முன்னதாக, ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த ஆண்டு பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்று கூறியிருந்தார். இலவசங்கள் தொடர்பாக, பாஜகவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்ந்துள்ளனர். 

இதையடுத்து, அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இலவச அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி மீண்டும் விமர்சித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா திட்டங்கள் அவர்களது சமூக படிநிலையை உயர்த்துவதற்குத்தானே தவிர வேறு எதற்கும் இல்லை என்ற வாதங்கள் பிரதானமாக முன்வைக்கப்படும் நிலையில், பாஜகவினர் இலவசங்கள் கொடுப்பதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதேசமயம், பிரதமர் மோடி வழங்கிய வீடு, கேஸ் அடுப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போது, அவை இலவசங்கள் கிடையாது மக்களின் அடிப்படை உரிமை என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios