கனடா பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றதையடுத்து, இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கைத் தொடர்ந்து மோசமடைந்த இருதரப்பு உறவுகள் மீண்டும் மலர புதிய தூதர்கள் நியமனம் போன்ற நல்லெண்ண நடவடிக்கைள் எடுக்கப்படலாம்.
கனடா தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நேர்மறையான மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் இந்தியாவுடான உறவு விரிசல் கண்ட நிலையில், மார்க் கார்னி புதிய பிரதமராக பொறுப்பேற்றதும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம், தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில் மார்க் கார்னி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.
மேலும், புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) மோசமான தேர்தல் முடிவும், கனடாவில் உள்ள காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளரான அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கின் ராஜினாமாவும் இந்தியா - கனடா உறவுகளை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிரதமர் மோடி வாழ்த்து:
"இந்தியாவும் கனடாவும் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டவை. இருநாட்டு மக்களுக்கிடையேயான துடிப்பான உறவுகளால் பிணைக்கப்பட்டவை," என்று பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். "நமது உறவை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் வழங்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்," என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜூன் 2023 இல் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து இந்தியா - கனடா இடையேயான உறவுகள் மோசமடைந்தன. கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது உட்பட பல நடவடிக்கைகளை எடுத்தன.
இந்நிலையில், மீண்டும் இந்தியா - கனடா இடையே நல்லுறவு ஏற்படுவதற்கான முதல் அறிகுறியாக, கனடாவுக்கு புதிய தூதராக தினேஷ் பட்நாயக்கை நியமனம் செய்வதற்கான ஆவணங்களை இந்தியா அனுப்பியுள்ளது. தினேஷ் நாயக் தற்போது ஸ்பெயினுக்கான இந்திய தூதராக உள்ளார். பரஸ்பர நட்புறவுக்கான முதல் முன்னெடுப்பாக, இரு நாடுகளும் புதிய தூதர்களை நியமிக்கும் பணியை இந்தியாவும் கனடாவும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தம்:
நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை தொடங்கிய பின்னர் இந்தியா-கனடா இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) இடைநிறுத்தப்பட்டது. புதிய பிரதமர் மார்க் கார்னி இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் கனடாவின் ஆல்பர்ட்டாவில் நடைபெற இருக்கும் G7 உச்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்பதும் உற்றுநோக்கப்படும் விஷயமாக இருக்கும்.
"ட்ரூடோ உடைத்ததை சரிசெய்ய கார்னிக்கு வாய்ப்பு உள்ளது. புதிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான உறவைத் தொடரத் தயாராக இருப்பதை இந்தியா ஏற்கனவே உணர்த்தியுள்ளது. இரு நாடுகளும் நடைமுறை ரீதியாக முன்னேறலாம், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பலாம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தலாம், பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம், மேலும் முடங்கிப்போன வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்கலாம்," என்று கனடாவுக்கான முன்னாள் தூதர் அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார். இது இந்தியா-கனடா உறவில் ஒரு திருப்புமுனை என்றும் அவர் கூறுகிறார்.


