கனடா தேர்தலில் மார்க் கார்னியின் வெற்றி இந்தியாவுடனான உறவில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்னி, முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் ஏற்பட்ட பதற்றங்களைத் தணித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கார்னி கடனாவின் புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

இம்மாத தொடக்கத்தில், தனது பரபரப்பான பிரச்சாரங்களுக்கு இடையே இந்து சமூகத்தினருடன் இணைந்து ராமநவமி கொண்டாடினார். முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவு மோசமடைந்திருந்த நிலையில், கார்னி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

கார்னி பிரதமராகப் பதவியேற்பதன் மூலம் இந்தியாவுடனான உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரூடோவின் ஆட்சியில் ஏற்பட்ட பதற்றங்கள் முடிவுக்கு வரும் எனவும் நம்பப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் வெற்றி:

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட ஹரி ஆனந்த சங்கரி (ஸ்கார்பரவ்ப் பார்க்), ஜுவானிடா நாதன் (பிக்கரிங்-புரூக்ளின்), அனிதா ஆனந்த் (ஒக்வில் கிழக்கு) ஆகிய 3 பேரும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் இரண்டு இலங்கைத் தமிழர்களும் கனடா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். 5 ஈழத் தமிழர்கள் வேட்பாளர்களாக இருந்த நிலையில், மூவர் மட்டும் வெற்றி அடைந்துள்ளனர். இவர்கள் மூவருமே ஆட்சியைப் பிடிக்கும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பும் கார்னி:

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த கார்னி தீவிரமாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்னி, பிரச்சனைகளை உருவாக்குபவராக அல்லாமல், தீர்வுகாண்பவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான வர்த்தகப் போருக்குப் பிறகு, இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகளைத் தேடுவதாக அவர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய நாள் அளித்த பேட்டியில், கனடா-இந்தியா உறவு மிகவும் முக்கியமானது என்று கார்னி தெரிவித்தார். இதுவரை, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலை குறித்து கார்னி நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. ட்ரூடோ இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி இந்தியாவுக்கு எதிராகப் பேசியிருந்தார். கடந்த காலச் சுமைகளை விட்டுவிட கார்னி தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இருதரப்பு உறவுகளில் உள்ள பதற்றத்தை பரஸ்பர மரியாதையுடன் தீர்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவதாக மிரட்டியதுடன், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதன் பிறகு, இந்தியாவுடனான கனடாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்பைச் சமாளிப்பது எளிதல்ல என்பதை கார்னி அறிவார். புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் தேவையை அவர் வலியுறுத்தியுள்ளார். இங்குதான் இந்தியாவின் பங்கு முக்கியமானதாகிறது. மார்ச் மாதத்தில், "கனடா ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் தனது வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்த விரும்புகிறது. இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன" என்று கார்னி கூறினார்.

ட்ரூடோ ஆட்சியில் மோசமடைந்த உறவு:

கார்னியின் கவனம் வெளியுறவுக் கொள்கையை விட கனடாவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் அதிகமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் இது நடக்கவில்லை. ட்ரூடோ சீக்கியத் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் இந்தியாவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.

செப்டம்பர் 2023 இல், ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்திய அரசுக்குப் பங்கு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதையடுத்து இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தூதர்களை வெளியேற்றின. இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன. இந்தியா, கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தியது.

இந்தியா - கனடா உறவின் எதிர்காலம்:

இந்தியாவுடனான கார்னியின் வெளியுறவுக் கொள்கையில் தீவிரவாத சீக்கியக் குழுக்களின் செல்வாக்கு குறைவாக இருக்கும் என்று இந்தியா நம்புகிறது. ட்ரூடோவின் முந்தைய ஆட்சி, காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங்கின் தேசிய ஜனநாயகக் கட்சியின் (NDP) ஆதரவை நம்பியிருந்தது. ஜக்மீத் சிங்கின் தேர்தல் தோல்வியும், தேசிய ஜனநாயக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகுவதும் இந்தியா-கனடா உறவுகளுக்கு நன்மை பயக்கும். கனடாவில் இந்தியத் தூதரை மீண்டும் நியமிப்பது குறித்து இந்தியா ஏற்கனவே பரிசீலித்து வருவதாகப் பல செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சுமார் 1.8 மில்லியன் இந்திய வம்சாவளியினரும், ஒரு மில்லியன் இந்தியர்களும் வசிக்கின்றனர். இது கனடாவின் மக்கள் தொகையில் 3% க்கும் அதிகமாகும். கனடாவில் சுமார் 4,27,000 இந்திய மாணவர்களும் உள்ளனர். பதற்றங்கள் இருந்தபோதிலும், இருதரப்பு வர்த்தகம் 2023 இல் 13.49 பில்லியன் கனேடிய டாலர்களை (83 கோடி ரூபாய்) எட்டியது. இருப்பினும், இருதரப்பு உறவில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கனடா மற்றும் இந்தியா இடையேயான விரிவான பொருளாதாரப் பங்கேற்பு ஒப்பந்தம் (CEPA) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.