டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே வாகனத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று (நவம்பர் 10) மாலை டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். வெடிவிபத்துக்குப் பின் அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது. வெடிப்பு சுமார் மாலை 6.52 மணிக்கு மெதுவாக நகர்ந்த வாகனத்தில் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செங்கோட்டை அருகே பயங்கர வெடிவிபத்து
இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா தெரிவித்ததாவது, “ஒரு வாகனம் சிக்னலில் நின்றபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பல வாகனங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்துள்ளனர். தற்போது NIA, FSL உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளும் சம்பவ இடத்தில் செயல்படுகின்றன. நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவர் தனது பதிவில், ““இந்த மாலையில் டெல்லி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்தார். அதோடு, “உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையைப் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொண்டேன்” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
அமித் ஷா அவசர ஆலோசனை கூட்டம்
வெடிவிபத்துக்குப் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக் நாயக் (LNJP) மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
“வெடிவிபத்து தொடர்பாக அனைத்து விசாரணை துறைகளும் பணியில் ஈடுபட்டுள்ளன. CCTV காட்சிகள், சாட்சியங்கள், வெடிமருந்து மாதிரிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகின்றன. பொதுமக்கள் அமைதியாக இருந்து, உறுதியான தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.
நாடு முழுவதும் உயர் பாதுகாப்பு
இந்த சம்பவத்தையடுத்து மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (CISF) நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை கூறியது. விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியாளர்களுக்கு அனைத்து முக்கிய இடங்களிலும் கடுமையான சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய விசாரணை முகமை (NIA) மற்றும் தடயவியல் ஆய்வகம் (FSL) குழுக்கள் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை பரிசோதித்து வருகின்றன.
