pm narendra modi birthday:பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ! டீ கடை டூ டெல்லி கோட்டை வரை! ஸ்வாரஸ்ய பார்வை
உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த ஜனநாயகத்தை உலகளவில் மதிக்கச்செய்தது நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிரதமராக பதவி ஏற்றபோதுதான்.
உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த ஜனநாயகத்தை உலகளவில் மதிக்கச்செய்தது நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிரதமராக பதவி ஏற்றபோதுதான்.
ஆமாம், தேநீர் விற்ற சாமானிய மனிதர்கூட இந்தியாவில் பிரதமராக முடியும் என்று இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலகிற்கு எடுத்துக்கூறியது பிரதராக மோடி பதவி ஏற்ற அந்த நிகழ்வுதான்.
தன்னை பிரதமராக அலங்கரித்துப் பார்த்த இந்த பாரதத்தை கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி
உலகளவில் மதிப்புடனும், நிமிர்ந்தும் பார்க்கவைத்துள்ளார் என்றால் மிகையில்லை. பிரதமராக மோடி பதவி ஏற்றபின், பாரதத்தாயின் மணிமகுடத்தில், ஒளிமிகுந்த வைரத்தின் பிரகாசம் அதிகரித்துள்ளது.
பிரதமராக மோடி பதவி ஏற்றபின் தேசம் பல சோதனைக் காலத்தை கடந்துள்ளது. ஆனால் அந்த சோதனைகள் அனைத்தையும் மோடி தனது சாதனையாக மாற்றியுள்ளார். அதற்கு முக்கியக் காரணம் மோடியின் இமயமலை அளவுள்ள அவரின் தன்னம்பிக்கைதான்.
மோடி குறித்து எழுத்தாளர் என்டி மோரோ, "Narendra Modi: A Political Biography" என்ற நூலை எழுதியுள்ளார். அதில் மோடி குறித்து அவர் குறிப்பிடுகையில் “ மோடியின் பரமவிரோதிகள் கூட அவரின் தன்னம்பிக்கை மீது சந்தேகம் எழுப்பமாட்டார்கள்” எனத் தெரிவி்த்துள்ளார்.
தனது வாழ்நாளில் பெரும்பகுதியை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், பாஜக கட்சிக்கும், தேசத்துக்கும், மக்கள் சேவைக்கும் அர்ப்பணித்த பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் பாஜக தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
“டீக்கடைக்காரர் முதல் இந்திய பிரதமர் வரை” - பிரதமர் மோடியை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்.!
நரேந்திர தாமோதர் தாஸ் மோடி குஜராத் முதல்வராக ஆனதும், பிரதமராக பதவி ஏற்றதும் ஓர் இரவில் நடந்தது அல்ல, அவர் கடந்து வந்த பாதை பூக்கள் நிறைந்தவையும் அல்ல. தடைகளும், முற்களும், அரசியல் சூழ்ச்சிகளும் நிறைந்தது. அதை படிக்கல்லாக மாற்றித்தான் மோடி இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
ஒரு சாமானியர் இந்த உயர்ந்த பதவியை வகிக்க முடியுமென்றால், அந்த சாமானியரின் நெஞ்சுறுதியும், தன்னம்பிக்கையும், போராட்டகுணமும், தனிமனித ஒழுக்கமும் எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை சற்று நினைத்தால் அது பிரமாண்டமானதுதான்.
மோடிக்கு இந்த குணங்கள் அனைத்தும் இருந்ததால்தான் அவரை காலம் இந்த உயர்த்துக்கு அழைத்து வந்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த வந்த பாதைகளைப் பற்றிப் பார்க்கலாம்…
இதற்கு முன் இருந்த பிரதமர்களைப் போல் தங்கத்தட்டில் சாப்பிட்டு, வெள்ளி குவளையில் பால்குடித்து, கோடீஸ்வர குடும்பத்தின் பின்புலத்தில் மோடி வரவில்லை.
குஜராத்தின் வடக்குப்பகுதியில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில் மோடியின் குடும்பம் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மோடி. 1950ம் ஆண்டு, செப்டம்பர் 17ம்தேதி, தாமோதர்தாஸ் மோடி, ஹிராபா மோடிக்கு 6 பிள்ளைகளில் 3வதாகப் பிறந்தவர் மோடி.
சிறுவயதிலிருந்தே மோடி தனது தந்தைக்கு உதவிகளைச் செய்து, குடும்பத்தின் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டவர். அந்த வகையில் உள்ளூர் ரயில் நிலையத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து தேநீர் விற்பனையும் செய்துள்ளார் மோடி.
பிரதமராக மோடி உயர்ந்தபின்பும்கூட ஒருபோதும் தனது கடந்த காலத்தை மறைக்காதவர், மறக்காதவர். தான் சிறுவயதில் தேநீர் விற்றேன் என்ற எளிமையான சம்பவத்தை இன்னும் நினைவுகூறி, தான் எளிமையாளர்களுள் ஒருவர், ஏழைகளில் ஒருவன் என்பதை குறிப்பிடுகிறார்.
பள்ளிப்படிப்பை குஜராத்தில் முடித்த மோடி, இளங்கலைப் படிப்பை டெல்லிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியிலும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பையும் படித்து பட்டம் பெற்றார்.
நரேந்திர மோடிக்கு சிறுவயதிலிருந்தே துறவறம், துறவு வாழ்க்கையில் அதிக ஈடுபாடு உண்டு. சுவாமி விவேகானந்தரின் நூல்களை விரும்பி மோடி படித்தார். தாய்நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மோடி எண்ணினாலும், காலம் அவரை வேறு வழியில் அதாவது பிரதமராக நாட்டை பாதுகாக்க திட்டம் வைத்திருந்தது.
மோடி தனது 17வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். 2 ஆண்டுகளுக்குப்பின் வீடுதிரும்பிய மோடி, அதன்பின் அகமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மோடிக்கு சிறுவயதில் வழிகாட்டியாக இருந்தவர் "வக்கீல் சாஹேப்" என அழைக்கப்படும் லட்சுமணராவ் இனம்தார்.
1972ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரக்காக மாறிய மோடி, அதன்பின் முழுநேர உறுப்பினராக மாறினார். தனது பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை உருவாக்கினார்.
அடுத்த 10 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடியின் நிலை விறுவிறுவென உயரத் தொடங்கியது.
இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை 1975ம் ஆண்டு கொண்டுவந்தபோது, பல்வேறுவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக ஜெயபிரகாஷ் நாராயன் உருவாக்கிய நவநிர்மான் சேனா, உருவானபோது அதில் இணைந்து, செயல்பட்டு, முக்கிய அங்கமாக மோடி இருந்தார்.
குஜராத் லோக் சங்கர்ஷ் சமிதியின் பொதுச்செயலாளராகவும் மோடி இருந்தார். 1977ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்தியில் அகற்றப்பட்டு ஜன சங்கம் ஆட்சிக்கு வந்தது.
1980களில் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு பணியாற்றத் தொடங்கினார். மோடியின் ஒழுக்கமான செயல்பாடுகள், அர்ப்பணிப்பு உணர்வு அவரை படிப்படியாக உயர்த்தியது. 1987ம் ஆண்டு மூத்த தலைவர்கள் ஒருங்கிணைத்து பாஜக என்ற கட்சியை உருவாக்கியபோது, அதில் மோடியும் இணைந்தார். அதுதான் மோடியின் வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கியது.
“விவசாயிகளின் நண்பன்.. நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி” - என்ன செய்தார் தெரியுமா ?
பாஜகவில் சேர்ந்தபோது, தான் ஒருநாள் தேசத்தை ஆளும் பிரதமராக வருவேன் என்று நிச்சயமாக மோடி எதிர்பார்த்திருக்கமாட்டார். ஏனென்றால், அப்போது பாஜகவில் மிகப்பெரிய தலைவர்களான அடல்பிஹாரி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கேசுபாய் படேல் என ஏராளமான தலைவர்கள் இருந்தார்கள். இவர்களைஎல்லாம் மீறி அரசியல் செய்வது என்பது கடினம் என்று மோடி நினைக்கவி்ல்லை.
மாறாக மோடியின் நற்பண்புகள், தனிமனித ஒழுக்கம், கட்சிப்பணியில் அர்ப்பணிப்பு போன்றவை பதவியை தானாக தேடிவரவைத்தது என்பதுதான் உண்மை.
பாஜகவில் கடந்த 1989ம் ஆண்டு மோடி சேர்ந்ந்த ஓர் ஆண்டிலேயே அவர் குஜராத் பகுதியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு கட்சியை வலுப்படுத்த தயாராகினார். 1995ம் ஆண்டு குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, அதில் கட்சியின் தேசிய செயலாளராக மோடி நியமிக்கப்பட்டார். 1998ல் மோடி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு 2001வரை இருந்தார்.
எப்போதுமே மோடி வித்தியாசமாக செயல்களை செய்து மற்றவர்களை ஈர்க்கும் தன்மை கொண்டவர் மோடி. அதனால்தான் எளிதாக அனைவராலும் அடையாளம் காணப்படுவார். இதை ஒருமுறை மோடியின் நண்பரும், பிற்காலத்தில் அரசியல் எதிராக மாறியாக சங்கர் சிங் வகேலாவே கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு அக்டோபரில் குஜராத்தில் பூஜ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த பூகம்பத்திலிருந்து மாநிலத்தின் இழப்பை மீட்கவும், சரிவர சமாளிக்க அப்போது இருந்த கேசுபாய் படேலால் முடியவில்லை.
நாளை பிரதமர் மோடியின் பிறந்தநாள்… குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகளின் விவரம் இதோ!!
இது காங்கிரஸ் கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வராக மோடி நியமிக்கப்பட்டார். 2002ம் ஆண்டு தேர்தலில் மணிநகர் தொகுதியில் வென்ற மோடி மீண்டும் முதல்வராக நியமிக்கப்பட்டு, கேசுபாய் படேலின் அரசியல்காலம் முடிவுக்கு வந்தது.
2002ம் ஆண்டு மோடி பதவி ஏற்ற சில மாதங்களில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதைத் தொடர்ந்து இந்து, முஸ்லிம் வன்முறை நடந்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
குஜராத் கலவரத்தைப் பாரத்த அமெரிக்க அரசு, மோடி அமெரிக்க பயணத்தின்போது அவருக்கு விசா வழங்கவே மறுத்துவிட்டது. ஆனால், மோடியின் தன்னம்பிக்கை, அதேஅமெரிக்கா அவரை சிவப்புக் கம்பளம் விரித்து பிரதமராக மோடி வந்தபோது வரவேற்றது வேறு கதை.
குஜராத் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தனது பிம்பத்தை மாற்றும் முயற்சியில் தனது எஞ்சிய காலத்தை பயன்படுத்திக் கொண்டார் மோடி. குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை 'குஜராத் மாதிரி' என்று விளம்பரப்படுத்தினார்.
தனியார் துறைக்கு உத்வேகம் அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களில் மேம்பட்ட நிர்வாகம், மற்றவர்களை கவரக்கூடிய 10 சதவிகித வளர்ச்சி என குஜராத் முன்னேறியிருப்பதாக மக்களின் முன் எடுத்துரைத்தார்.
மோடி மிகச்சிறந்த பேச்சாளர்,வார்த்தைகளால் விளையாடுபவர். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவரின் பிரச்சாரம் பாஜகவுக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்திருந்தது. ஒருமுறை சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் “ இன்னொரு குஜராத் உருவாகவிடமாட்டோம்” என்றார்.
அதற்கு தனது பாணியிலேயே பதில் அளித்த மோடி, “ நிச்சமயாக குஜராத்தைப் போன்று வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும், செழிப்பிலும் மற்றொரு குஜராத்தை உங்களால் உருவாக்க முடியாது”எ ன்று பேசி வாயை அடைத்தார்.
மோடியின் பிரச்சாரம், சொல்லாட்சி, சாதுர்யமான பேச்சு பாஜகவுக்கு தேர்தலில் வெற்றிகளை குவிக்க முக்கியமானதாக அமைந்திருந்தது. 10 ஆண்டுகளுக்குப்பின் 2014ம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பிரதமராக மோடி பதவி ஏற்றபோது முதல் 5 ஆண்டுகாலத்தில் அவர் எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்தியப் பொருளாதாரத்தில் கறுப்புப்பணம், தீவிரவாத ஒழிப்பு போன்றவை பணமதிப்பிழப்பால் இருக்கும் என்று கூறி கொண்டுவரப்பட்டாலும் அது வெற்றியா என்பது இதுவரை தெரியவில்லை. மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு இன்றுவரை பாஜகவைத் தவிர அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மோடி ஆட்சியில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி நாட்டிலேயே மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமாக பாஜகவினரால் கூறப்பட்டது. ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மோசமாக பாதித்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
இந்திய ராணுவத்தின் நிலைகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மீது துல்லியத்தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு அனுமதியளித்தது மோடியின் துணிச்சலுக்கு பெரிய உதாரணம்.
உரி தாக்குதல், பாலகோட் தாக்குதல் , புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கரங்களுக்கு சுதந்திரத்தை அளித்து செயல்பட வைத்த மோடியின் ராஜதந்திரம் உலகளவில் இந்தியாவை மிரட்சியோடு பார்த்தது.
பிரதமர் மோடி தனது முதல் 5 ஆண்டுகாலத்தில் 92 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தது எதிர்க்கட்சிகளால் கிண்டலாகப் பேசப்பட்டது. ஆனால், மோடியின் ஆட்சியில்தான் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் நட்பு வலுப்பெற்று ராஜாங்கரீதியான உறவுகள் பலமடைந்தது.
ஊழலுக்கு எதிரானவராக, தேசத்தின் பாதுகாவலாக இருக்கிறேன் எனக் கூறி 2019ம் ஆண்டு தேர்தலை பிரதமர் மோடி சந்தித்து மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
அதன்பின் பாஜகவின் நீண்டகால தேர்தல் வாக்குறுதியான ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு உரிமைச் சட்டமான 370 பிரிவை ரத்துசெய்தது, குடியுரிமைத் திருத்தச்சட்டம், முத்தலாக் சட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க செயல்களை மோடி செய்து தனது துணிச்சலை வெளிக்காட்டினார்.
மோடியின் செயல்பாடுகள் பலதரப்பிலும் விமர்சிக்கப்பட்டாலும், அந்த செயலால் இந்தியாவின் வலிமை, ஸ்திரத்தன்மை மேலும் வலுபடைந்தது.
மோடி என்ற பிராண்டை, உருவாக்க நரேந்திர மோடி தானே செதுக்கிக் கொண்டு கடுமையாக உழைத்திருக்கிறார். அவரின் தன்னம்பிக்கை நிறைந்த நடை, பார்வை, பேச்சு, செயல்பாடுகள் பிறருக்கு அது அகந்தையாக இருந்தாலும், அதுதான் “மோடி”