PM Modi 72nd Birthday: பிரதமர் மோடியின் பாபுலர் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் வெற்றிப் பாதைகள் ஒரு பார்வை!!
பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது எட்டு ஆண்டு கால ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, அவற்றின் வெற்றிப் பாதைகளை இங்கே பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72 வயது துவங்குகிறது. குஜராத்தின் மகேசனா மாவட்டத்தில் உள்ள வாட்நகரில் 1950 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி, இன்று காலகட்டத்தில் உலகத் தலைவராக உருவெடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அதன்பிறகு நாட்டின் பாமர மக்களுக்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார். அந்த முக்கிய திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. ஆயுஷ்மான் பாரத் திட்டம்:
ஆயுஷ்மான் பாரத் யோஜனா 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் 10 கோடிக்கும் அதிகமான ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், இந்திய அரசு, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்குகிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் உடல்நலக் குறைபாட்டிற்கான செலவுகளை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் இவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
2. PM கிசான் சம்மன் நிதி திட்டம்:
சிறு விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாய குடும்பங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், 6 ஆயிரம் ரூபாயை, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, 2 ஆயிரம் ரூபாய் என இரண்டு தவணை முறையில் அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
3. உஜ்வாலா திட்டம்:
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன. முன்பெல்லாம் அடுப்பில் உணவு சமைத்துக்கொண்டிருந்த வீடுகளுக்கு, தற்போது இத்திட்டத்தின் மூலம் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் நோக்கம் கிராமப்புற பெண்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்கி, பணிச் சுமையை குறைப்பதாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 51 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
4. பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா:
பிரதம மந்திரி ஜன்-தன் யோஜனா (PM Jan Dhan Yojana) 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் கீழ், நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கி வசதிகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் திறக்கலாம். ஜன்தன் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய அல்லது எடுக்க கட்டணம் ஏதும் இல்லை. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும். இதில், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கலாம். கணக்கைத் தொடங்குபவர்களுக்கும் ரூபே டெபிட் கார்டு கிடைக்கும். அதே நேரத்தில், ஏடிஎம் கார்டில் 2 லட்சம் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும். இதனுடன், 30,000 ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் கிடைக்கும். பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 2022 வரை 46.25 கோடி பயனாளிகளின் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
5. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா:
2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, மோடி அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தில் ஒரு நபருக்கு மாதம் தோறும் 5 கிலோ ரேஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்கும் இந்தியா.. மத்திய அரசு அறிவிப்பு !
6. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா:
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித் தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும், அரசு சார்பில் வீடு கட்ட நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டுக் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கப்படுகிறது. இதன் கீழ், ஒவ்வொரு குடும்பமும் ரூ. 2.60 லட்சம் பயன் பெறுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் தொகை மற்றும் மானியம் நேரடியாக ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
7. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி மற்றும் சுரக்ஷா பீமா யோஜனா:
மத்திய அரசால் இரண்டு காப்பீட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி மற்றும் சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகியவை அடங்கும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவில், வருடத்திற்கு வெறும் 12 ரூபாய் பிரீமியம் செலுத்துவதன் மூலம் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டைப் பெறலாம். அதே நேரத்தில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.436 செலுத்தி 2 லட்சம் இன்சூரன்ஸ் பெறலாம்.
8. பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம்:
பிரதம மந்திரி முத்ரா யோஜனா (பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம்) 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், கார்ப்பரேட் அல்லாத, பண்ணை அல்லாத, சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட தொழில் தொடங்க இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இது தவிர தொழிலை பெருக்க இத்திட்டத்தின் கீழ் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. இதில் ஷிஷு, கிஷோர் மற்றும் தருண் பிரிவு உள்ளது. அதில் கடன் வழங்கப்படுகிறது. சிசு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரையும், கிஷோர் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரையும், தருண் திட்டத்தின் கீழ் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
9. சுகன்யா சம்ரித்தி யோஜனா:
நாட்டின் மகள்களை தன்னிறைவு அடையச் செய்வதற்கும், அவர்களை மேலும் முன்னேற்றுவதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 2015ஆம் ஆண்டு சுகன்யா சம்ரித்தி யோஜனாவைத் தொடங்கினார். வருமானம் இல்லாமல், தங்களது குழந்தைகளை படிக்க வைக்க முடியாத குடும்பங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளின் கவலைகளைத் தீர்க்க அரசாங்கம் சுகன்யா சம்ரித்தி யோஜனாவைக் கொண்டு வந்தது. இதில் முதலீடு செய்வதன் மூலம் மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளுக்கு பணம் சேர்க்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட மகள்களின் கணக்கு அவர்களின் பெற்றோரின் பெயரில் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கைத் தொடங்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இருப்பினும், சிறுமியின் வயது 18 க்குப் பிறகு படிப்பிற்காக இந்தக் கணக்கிலிருந்து தொகையை எடுக்க முடியும், ஆனால் முழுத் தொகையும் 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கும்.
10. பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா:
40 வயது வரை உள்ள அமைப்பு சாராத் துறை தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும் இது. இத்திட்டத்தில், 2 ஹெக்டேர் விவசாய நிலம் உள்ள, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சிறு, குறு விவசாயிகள் அனைவரும் சேரலாம். குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 42 ஆண்டுகள் வரை, அவர்களின் வயதைப் பொறுத்து, திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். 60 வயதிற்குப் பிறகு, அவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
11. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) இந்த திட்டம் பிரதமர் மோடியால் ஏப்ரல் 8, 2015ஆம் ஆண்டு, கார்ப்பரேட் அல்லாத சிறு/குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கத் தொடங்கப்பட்ட திட்டமாகும். பொருளாதார வெற்றி மற்றும் நிதி பாதுகாப்பை அடைவதில் எங்கள் கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளடக்கிய, நிலையான மற்றும் மதிப்பு அடிப்படையிலான தொழில் முனைவோர் கலாச்சாரத்தை உருவாக்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.