நாட்டில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் காணொலி மூலம் கொரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் கொரொனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 10ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான தினசரி கொரோனா தொற்று தற்போது 1 லட்சம் பேருக்கும் என்று பதிவாகிறது. குறைந்த கால அளவில் பல மடங்கு கிடுகிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,60,70,510 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,55,319 பேராக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரி தொற்று விகிதம் 11.05 சதவீதமாக உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 442 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 

இதனிடையே பெரும்பாலான மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு, பள்ளிகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள், உணவகங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் தடை அல்லது 50 %பேர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 17,934பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 15,379 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,555 அதிகரித்து 17,934 ஆக பதிவாகியுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 17,934 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 7,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய ஒமைக்ரான் வைரஸால் இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் மோடி, மாவட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு உறுதிபடுத்தவும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கான தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் அறிவுறுத்தினார்.இந்நிலையில் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நாளை மாலை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளின் நிலை குறித்தும் பிரதமர் மோடி கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், சிறார்களுக்கு தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் உள்ளிட்ட தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று கூறப்படுகிறது. 

Scroll to load tweet…